மியான்மரில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தான் பங்கேற்கும் வகையில் அரசியல் சாசனத் திருத்தம் மேற்கொள்ள ராணுவம் உதவ வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஆங் சான் சூகி வலியுறுத்தியுள்ளார்.
மியான்மரின் இரண்டாவது மிகப்பெரிய நகரான மண்டலேவில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சூகி பங்கேற்றார்.
இதில் அவர் பேசுகையில், “நாட்டை காப்பதே ராணுவத்தின் பணி. ஆட்சி நிர்வாகத்தில் ராணு வம் தலையிடக் கூடாது” என்றார்.
இதை அங்கு கூடியிருந்த மக்கள் பலத்த கரவொலி எழுப்பி ஆமோதித்தனர்.
அரை நூற்றாண்டு கால சர்வாதிகார ஆட்சியில் இருந்து 3 ஆண்டுகளுக்கு முன் மியான்மர் ஜனநாயக பாதைக்குத் திரும்பத் தொடங்கியது. என்றாலும் அந்நாட்டில் ஜனநாயகம் இன்னும் முழுமையாகத் திரும்பவில்லை. ஆட்சியில் ராணுவத்தின் தலையீடு தொடர்கிறது.
கடந்த 2008-ல் முன்னாள் ராணுவ ஆட்சியாளர்கள் உருவாக்கிய அரசியலமைப்பு சட்டத்தில், நாடாளுமன்றத்தில் 25 சதவீத இடங்கள் ராணுவத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. 3 கேபினட் அமைச்சர்களை ராணுவம் நியமிக்கவும், அரசியலமைப்பு சட்டத்தை நாடாளுமன்றம் மாற்ற முயன்றால் அதை அந்த அமைச்சர்கள் தங்களின் ரத்து அதிகாரம் மூலம் தடை செய்யவும் வகை செய்யப்பட்டுள்ளது.
மேலும் அதிபர், துணை அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பும் ஒருவரின் கணவரோ, மனைவியோ அல்லது குழந்தைகளோ வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றிருக்க கூடாது என அரசியல் சட்டப் பிரிவு கூறுகிறது.
ஆங் சான் சூகியின் கணவர் மைக்கேல் ஏரிஸ் பிரிட்டனைச் சேர்ந்தவர். இவர்களின் 2 குழந்தைகள் பிரிட்டன் குடியுரிமை பெற்றுள்ளன.
மியான்மரில் ஜனநாயகத்தை மீட்பதற்கான தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சூகி, அந்நாட்டு அதிபர் மற்றும் துணை அதிபர் பதவிக்கு வருவதை தடுக்கவே இந்த சட்டப் பிரிவு கொண்டுவரப்பட்டதாக கருதப்படுகிறது
இந்நிலையில் அரசியலமைப்பு சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ள ராணுவம் உதவ வேண்டும் என சூகி வலியுறுத்தி வருகிறார்.