இலங்கையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு பெண் கொல்லப்பட்டார். 12 பேர் காயமடைந்தனர்.
இலங்கை தலைநகர் கொழும்பில், ஆளும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாக நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இருந்தவர்களை நோக்கி அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் ஒரு பெண் பலியானதாக போலீஸார் தெரிவித்தனர். மேலும் 12 பேர் காயமடைந்த நிலையில், அதில் இருவர் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரத் தகவல் தெரிவித்தது.
பிரச்சாரக் கூட்டத்தில் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாக இலங்கையின் நிதி அமைச்சர் ரவி கருணானநாயகே மக்கள் மத்தியில் பேசி அங்கிருந்து புறப்பட்ட போது துப்பாக்கி குண்டு சப்தம் எழுந்ததாக கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து போலீஸார் கூறும்போது, "துப்பாக்கி ஏந்திய நபர்கள் 2 வாகனங்களில் வந்தனர். அவர்கள் துப்பாக்கிச்சூட்டுக்கு பின்னர் அதே வாகனத்தில் சென்றனர்" என்றார்.
இலங்கையில் ஆகஸ்ட் 17ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்தத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி சார்பில் பிரதமர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்க போட்டியிடுகிறார். மறுபுறத்தில் அவருக்கு எதிராக களத்தில் நிற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியைப் பிடிக்க களமிறங்கியிருக்கிறார்.
ஆனாலும் அவரது கட்சியின் தலைவரும் தற்போதைய அதிபருமான மைத்ரிபால சிறிசேனா, ராஜபக்சவுக்கு ஆதரவு அளிக்கவில்லை.