இந்தியாவின் புதிய பிரதமராக டெல்லியில் திங்கள்கிழமை பாஜக தலைவர் நரேந்திர மோடி பதவி யேற்கும் விழாவுக்கு வரும்படி இந்தியா விடுத்த அழைப்பை சனிக்கிழமை ஏற்றார் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்.இதன்படி, இரு நாள் பயணமாக திங்கள்கிழமை (மே 26-ம் தேதி) நவாஸ் டெல்லி செல்கிறார்.
நவாஸுடன் வரும் குழுவில் தேசியப் பாதுகாப்பு, வெளியுறவு விவகார ஆலோசகரான சர்தாஸ் அஜீஸ், நவாஸின் சிறப்பு உதவியாளர் தாரி பதேமி, வெளியுறவுச் செயலர் அய்சாஸ் சவுத்ரி உள்ளிட்டோரும் இடம் பெறுகின்றனர்.
இந்தியா விடுத்த அழைப்பு மீது பாகிஸ்தானின் நிலை என்ன என்பதில் 3 நாளாக மர்மம் நீடித்து வந்தது. பாக். ராணுவத்தில் உள்ள சிலர், நவாஸ் டெல்லி செல்லக்கூடாது என்பதில் பிடிவாதம் காட்டினர். இதனால், இந்தியா செல்வதா, வேண்டாமா என்பது பற்றி தனது ஆலோசகர் களுடன் நவாஸ் ஷெரீப் தொடர்ச்சியாக இரு நாளாக தீவிர ஆலோசனை நடத்தினார்
இதன் முடிவில், நவாஸ் டெல்லி செல்வார் என்பதை பாக். பிரதமர் அலுவலகம் சனிக்கிழமை உறுதி செய்தது.
வெள்ளிக்கிழமை இரவு பிரதமரின் சகோதரரும் பஞ்சாப் மாகாண முதல்வருமான ஷாபாஸ் ஷெரீப் ராணுவ தளபதி ரஹீல் ஷெரீபுடன் அரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து, இந்தப் பிராந்தியத்தில் அமைதி நிலவிடவும் இரு நாடு களுக்கும் இடையில் நல்லுறவை ஏற்படுத்தவும் இந்தியாவுக்குச் செல்வதன் முக்கியத்துவம் பற்றி பிரதமரிடம் எடுத்துரைக்கப்பட்டது என நவாஸின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தியாவில் இருந்து கிடைத்த நிகழ்ச்சி நிரல்படி, நவாஸ் ஷெரீப் மே 27-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார். குடியரசுத் தலைவரையும் சந்திப்பார். திட்டமிட்டபடி சந்திப்பு முடிந்ததும் பிற்பகல், நவாஸ் பாகிஸ்தான் திரும்புவார் என வெளியுறவு அமைச்சகம் இஸ்லாமாபாத்தில் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோடி-ஷெரீப் சந்திப்பில் முக்கிய எதிர்பார்ப்பு என்ன என்று கேட்டதற்கு ‘இப்போதுதான் முதல்முறையாக இரு தலைவர்களும் சந்திக்க உள்ளனர்.உறவை மேம்படுத்த முயற்சி எடுக்கப்படும்’ என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு வரும்படி பக்கத்து நாடுகளுக்கு இப்போதுதான் இந்தியா முதல்முறையாக அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்ஸாய், மாலத்தீவு அதிபர் அப்துல்லா யமீன், இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே, பூடான் பிரதமர் ஷெரிங் டாப்கே, நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலா, வங்கதேச நாடாளுமன்ற தலைவர் ஷிரின் ஷர்மின் சவுத்ரி, மொரீஷியஸ் பிரதமர் நவீன் சந்திர ராம் கூலம் ஆகியோரும் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார்கள். மே 26-ம் தேதி பதவியேற்பு முடிந்த பிறகு எல்லா தலைவர்களுக்கும் குடியரசுத் தலைவர் விருந்து கொடுப்பார்.
பதவியேற்ற மறுதினம், ஒவ்வொரு தலைவர்களுடனும் மோடி பேச்சு நடத்த உள்ளார். இந்த சந்திப்பில் இரு தரப்பு உறவை மேம்படுத்துவது, அனை வருக்கும் பொதுவான சவால்கள் பற்றி தலைவர்கள் எடுத்துரைப் பார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.