இராக், கிழக்கு மாகாணமான தியாலாவில் இஸ்லாமிக் ஸ்டேட் தீவிரவாதிகள் நடத்திய கொடூரமான தற்கொலைத் தாக்குதலுக்கு 115 பேர் பலியாகியுள்ளனர். மேலும் எண்ணற்றோர் காயமடைந்துள்ளனர்.
ரம்ஜான் புனித மாத நிறைவையொட்டி ஷியா பிரிவு முஸ்லிம் மக்கள் பெரும்பாலும் சந்தைப் பகுதியில் குழுமியிருந்தனர், அப்போது பயங்கர வெடிகுண்டுகள் நிரம்பிய டிரக் ஒன்று வெடிக்கச் செய்யப்பட்டதில் குழந்தைகள், பெண்கள் உட்பட 115 பேர் பலியாக, எண்ணற்றோர் கைகால்களை இழந்துள்ளனர்.
ரம்ஜான் கொண்டாட்ட மகிழ்ச்சி சில நொடிகளில் பாழாக, மரண ஓலங்களும், ரத்தக்களறியுமானது அந்தச் சந்தைப் பகுதி. இதுவரை சுமார் 170 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. பலியானோர் எண்ணிக்கை பற்றி அதிகாரபூர்வமற்ற தகவல்கள் கூறுவதென்னவெனில் சுமார் 160க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கிறது.
சிறு குழந்தைகளின் உடல்கள் ஆங்காங்கே கிடந்ததையடுத்து தக்காளி பெட்டிகளை காலி செய்து அதில் குழந்தைகளின் உடல்கள் கொண்டு செல்லப்படும் கோரக் காட்சியைப் பார்த்ததாக அதிர்ச்சியிலிருந்து மீள முடியாத நேரில் பார்த்த சாட்சியங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் பலர் உடல் உறுப்புகளை இழந்த நிலையில் தரையில் மருத்துவ உதவி நாடி கிடப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெயர் கூற விரும்பாத ஒருவர் கூறும் போது, “நாங்கள் ரம்ஜானை முன்னிட்டு விடுப்பு நாள் என்பதால் மகிழ்ச்சியுடன் குடும்பத்துடன் ஷாப்பிங் வந்தோம். ஆனால் இந்த மகிழ்ச்சி சில நொடிகளில் பெரும் அவலமாக மாறியது. நாங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், குழந்தைகளை இழந்துள்ளோம். அரசு எங்களுக்கு பாதுகாப்பு அளிக்கத் தவறிவிட்டது” என்றார்.
இராக்கில் உள்ள ஐ.நா. மிஷனின் பிரதிநிதி ஜேன் கூபிஸ் தெரிவிக்கும் போது, “எந்த வித நாகரீக நடத்தைக்கும் அப்பாற்பட்ட மிகவும் கொடூரமான ரத்தக்களறியைச் செய்துள்ளனர்” என்றார்.
இஸ்லாமிக் ஸ்டேட் அமைப்புக்கு தியாலா பகுதி மக்கள் விசுவாசம் காண்பிக்காததால் தொடர்ந்து இப்பகுதியில் அந்த தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.