உலகம்

சீர்திருத்த ஒப்பந்தம்: கிரீஸ் பிரதமருக்கு கட்சிக்குள் எதிர்ப்பு

ராய்ட்டர்ஸ்

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள கடுமையான பொருளாதார சீர்திருத்த ஒப்பந்தத்துக்கு பணிந்ததாக கிரீஸ் பிரதமர் அலெக்சிஸ் சிப்ரஸுக்கு அவரது கட்சியிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கிரீஸைக் கடன் சிக்கலில் இருந்து மீட்கும் புதிய ஒப்பந்தத்துக்கு அதன் பிரதமர் அலெக்சிஸ் சிப்ரஸ் ஒப்புக்கொண்டார். ஐரோப்பிய யூனியனுடன் சுமார் 17 மணி நேரம் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையின் கடுமையான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை கிரீஸ் நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்ற வேண்டுமென்ற நிபந்தனையுடன் ரூ.70 ஆயிரம் கோடி கடனுதவியை வழங்க ஐரோப்பிய யூனியன் ஒப்புக் கொண்டது.

ஐரோப்பிய நாடுகள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு கிரீஸ் பிரதமர் அலேக்சிஸ் சிப்ரஸ் இணக்கம் தெரிவித்தார். கிரீஸ் நாட்டு மக்களின் அளித்த வாக்கெடுப்பு முடிவுக்கு எதிரான சில நடைமுறைகளை அமல்படுத்தக் கூடிய மசோதாக்களை வரும் நாட்களில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கவேண்டிய நிலையில் கிரீஸ் பிரதமர் அலெக்சிஸ் சிப்ரஸ் உள்ளார்.

இந்தத் திட்டத்தில், வருவாய் வரியை அதிகரிப்பது, முதியோர் ஓய்வூதியங்களைக் குறைப்பது, ஊழியர்களுக்கான சலுகைகளை திரும்பப் பெறுவது என பல திட்டங்கள் முன்வைக்கப்பட உள்ளன. இதற்கு சிப்ரஸின் கட்சி எம்.பிக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இவர்களை சமாதானப்படுத்த, மசோதா தாக்கலுக்கு முன்னரான கட்டாய அவசரக் கூட்டத்தை சிப்ரஸ் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை ஏற்பாடு செய்துள்ளார்.

கடந்த பல ஆண்டுகளாக நிதி நெருக்கடியால் சிக்கித் தவித்த கிரீஸின் நிலை கடந்த வாரம் மோசமான நிலையை எட்டியது. சர்வதேச நாணய நிதியமான ஐ.எம்.எப் அமைப்புக்கு அளிக்க வேண்டிய 1.6 பில்லியன் யூரோ தவணைத் தொகையை கிரீஸ் செலுத்த தவறியது. வளர்ந்த நாடான கிரீஸ், கடனை திருப்பி செலுத்தாத நாடு என்ற பெயரை பெற்றுவிட்டது. உச்சகட்டமாக யூரோவை நாணயமாக கொண்ட நாடுகளின் பட்டியலிலிருந்து கிரீஸ் விலக வேண்டிய சூழலும் ஏற்பட்டது.

இதன் மூலம் ஐரோப்பிய யூனியனில் இருந்தும், யூரோ கரன்சியில் இருந்து கிரீஸ் வெளியேறுவதும் தடுக்கப்பட்டுள்ளது. கிரீஸ் ஒட்டுமொத்தமாக திவாலாகாமலும் தப்பியது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT