சிங்கப்பூரில் வீடு வாடகைக்கு தரு வதில், இந்தியர்கள் மீது பாகுபாடு காட்டுவது அதிகரித்து வருகிறது.
வீடு வாடகை தொடர்பான இணைய தள விளம்பரங்களில் ‘இந்தியர்கள் மற்றும் சீனர்களுக்கு வாடகைக்கு தருவதில்லை” என்று வெளிப்படையாகவே குறிப்பிடு கின்றனர். இந்தியர்கள் மற்றும் சீனர்களுக்கு எதிரான இந்த பாகு பாட்டால் எவ்வளவு தொழிலாளர்கள் பாதிக்கப் பட்டுள்ளார்கள் என்ற விவரம் தெளிவாக தெரியவில்லை என்று பி.பி.சி. செய்தி நிறுவனம் கூறுகிறது.
“இந்தியர்கள் அதிக மசாலாப் பொருட்களை சமையலில் சேர்ப்பார்கள். இந்த வாசனை எங்களுக்குப் பிடிக்காது, அவர்கள் வீடுகளை சுத்தமாக வைத்துக்கொள்ள மாட்டார்கள்” போன்ற காரணங்களை சிங்கப்பூர்வாசிகள் தெரிவிக்கின்றனராம்.
பல்வேறு இன மக்கள் வாழும் சிங்கப்பூரில் சீனர்கள் 74 சதவீதமும், மலேய மக்கள் 13 சதவீதமும், இந்தியர்கள் 9 சதவீதமும், இதர மக்கள் 3 சதவீதமும் வசிக்கின்றனர். 90 சதவீத சிங்கப்பூர்வாசிகள் சொந்த வீடு வைத்துள்ளனர். இவர்கள் தங்கள் வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விடுகின்றனர். இங்கு வாடகைக்கு குடியிருப்பவர்கள் பெரும்பாலானோர் வெளிநாட்டினர். இங்கு வீடு வாடகை உயர்வதற்கு வெளிநாட்டினர் தான் காரணம் என்று உள்ளூர் மக்களில் ஒரு பிரிவினர் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில் வீடு வாடகைக்குத் தருவதில் இந்தியர்களுக்கு எதிரான பாகுபாட்டை தடுக்க வேண்டும் என சிங்கப்பூர் அதிபர் டோனி டேன் மற்றும் பிரதமர் லீ செயின் ஆகியோரிடம் ‘யூனிவர்சல் சொசைட்டி ஆப் ஹிந்துயிஸம்’ அமைப்பின் ராஜன் சேத் கோரிக்கை விடுத்துள்ளார்.