விடுதலைப் புலிகளின் சர்வதேச அமைப்புகள் கட்டுப்படுத்தப்படும் என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரா தெரிவித்துள்ளார்.
சர்வதேச தீவிரவாதம் தொடர்பாக அமெரிக்க அரசு அண்மையில் ஓர் ஆய்வறிக்கை வெளியிட்டது. அதில் விடுதலைப் புலிகளின் சர்வதேச அமைப்புகள் இன்னமும் செயல்பட்டு கொண்டிருக்கின்றன என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் சிலர் கேள்வி எழுப்பினர். அதற்கு அந்த நாட்டு வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரா அளித்த பதில் வருமாறு:
கடந்த காலங்களில் இலங்கையில் உள்நாட்டுப் போர் நடைபெற்றது. இதனால் நாடு முழுவதும் மிகப் பெரிய பாதிப்புகள் ஏற்பட்டன. அதுபோன்ற சூழ்நிலை மீண்டும் வரக்கூடாது. எனவே இந்த நேரத்தில் இனப் பிரச்சினைக்கான அடிப்படை காரணத்துக்கு விடைதேட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. முதல்கட்டமாக பாதிக்கப்பட்ட சமுதாயத்திடம் நேரடி தொடர்பை மேம்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
தீவிரவாதத்தை எதிர்கொள்ள தற்போதைய அரசு புதிய பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளது. அதாவது மென்மையான அதிகாரம், அரசு ரீதியான அணுகுமுறைகளைப் பின்பற்ற அரசு திட்டமிட்டுள்ளது. அதேநேரம் நாட்டின் பாதுகாப்பு விவகாரத்தில் சமரசம் செய்து கொள்ளப்படமாட்டாது. கடல்எல்லை பாதுகாப்பு, உள்நாட்டுப் பாதுகாப்பு அதிகரிக்கப்படும்.
இனம், மதம், சமுதாயம் என எந்த வகையிலும் நாட்டில் வன்முறை நேரிடக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. அதற்காக சம்பந்தப்பட்ட மக்களின் இதயத்தை வெல்ல அரசு முயற்சிக்கிறது.
விடுதலைப் புலிகளின் சர்வதேச அமைப்புகளைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதற்காக சர்வதேச நாடுகளின் புலனாய்வு அமைப்புகளோடு இணைந்து செயல்படுகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.