நான் மிகுந்த வலியை உணரும் போதோ, என் அன்புக்கு உரியவர்களுக்கு சுமையாக இருப்பதாக உணரும்போதோ அல்லது இந்த உலகுக்கு இனி பங்களிக்க ஏதுமில்லை என எண்ணும்போதோ மற்றவர்களின் உதவியுடன் தற்கொலை செய்துகொள்வேன் என உலகப் புகழ்பெற்ற இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
பிரிட்டனைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற இயற்பியலாளரான ஸ்டீபன் ஹாக்கிங் நரம்பியல் முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.அவருக்காக தயாரிக்கப்பட்ட பிரத்யேக நாற்காலிதான் அவரது உலகம். ஆனால் அவர் முடங்கிப் போய்விடவில்லை. பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்த அவரது கருத்துகள், அண்டவியல், குவாண்டம் ஈர்ப்பு, கருந்துளை பற்றிய ஆய்வுகள் ஆகியவற்றால் உலகின் மிகப்பெரும் விஞ்ஞானிகளுள் ஒருவராக உள்ளார்.
கடந்த 1985 முதல் பேசும் திறனை அவர் இழந்தார். அப் போது முதல் மின்னணு கருவியின் துணையுடன் பேசி வருகிறார். தற்போது பிபிசி தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் தனது மரணம் குறித்துப் பேசியுள்ளார் 73 வயதாகும் ஹாக்கிங். இப்பேட்டி வரும் 15-ம் தேதி ஒளிபரப்பாகவுள்ளது.
அந்தப்பேட்டியில் "உடல் ரீதியாக முற்றிலும் செயலிழந்து போகும் ஒருவருக்கு தன்னைத் தானே மாய்த்துக்கொள்ள மற்றவர்கள் உதவ வேண்டும். வாழ விருப்பமில்லாதவர்களை அவர்களின் விருப்பத்துக்கு மாறாக உயிருடன் வைத்திருப்பது அவர்களின் கண்ணியத்துக்கு இழைக்கப்படும் உச்சபட்ச அநீதி” எனத் தெரிவித்துள்ளார்.
2013-ம் ஆண்டே, முற்றிலும் செயலிழந்த நோயாளிகள் மற்றவர்கள் உதவியுடன் தற்கொலை செய்துகொள்வதை அனுமதிக்க வேண்டும் என்பதை ஆதரித்துப் பேசினார் ஹாக்கிங். இந்நிலையில் பிபிசிக்கு அளித்துள்ள பேட்டியில் ஹாக்கிங் மேலும் கூறியிருப்பதாவது:
மற்றவர்களின் உதவியுடன் நான் உயிரை மாய்த்துக் கொள்வதற்கு முன்பாக இப்பிரபஞ்சம் குறித்த புதிர்களை விடுவிப்பேன். இப்போது எனக்கு எந்த வலியும் இல்லை. ஆனால், என்னை நானே மாற்றி அமர்ந்து கொள்ளாத நிலையை அசவுகரியமாக உணர்கிறேன். நான் தனிமையால் பாதிக்கப்பட்டுள்ளேன். ஏனெனில் மக்கள் என்னிடம் பேசவும், என்னிடமிருந்து பதிலைப் பெறுவதற்கு காத்திருக்கவும் அச்சப்படுகின்றனர்.
நான் மீண்டும் சிறுவயதிலிருந்ததைப் போல நீச்சலடிக்க விரும்புகிறேன். எனது குழந்தைகள் சிறுவர்களாக இருந்தபோது அவர்களுடன் ஓடியாடி விளையாட முடியாமல் போனது எனக்கு வருத்தமாக இருக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.