உலகம்

அமெரிக்க கம்ப்யூட்டர்களில் ஹார்ட்வேர் கோளாறு: விசா வழங்குவதில் பாதிப்பு

பிடிஐ

அமெரிக்க வெளியுறவு அமைச்சக கம்யூட்டரில் ஏற்பட்ட ஹார்ட்வேர் கோளாறு காரணமாக பல்வேறு நாடுகளில் அமெரிக்க விசா வழங்கும் நடைமுறையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

பல்வேறு நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களிலும், துணைத் தூதரகங்களிலும் தினமும் ஏராளமானோர் விசா கேட்டு விண்ணப்பித்து வருகின்றனர். அவற்றை பரிசீலிப்பது, விசா ஒப்புதல் வழங்குவது உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் வாஷிங்டனில் உள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் ஒப்புதலுடன்தான் நடைபெறுகிறது. இந்தப் பணிகள் அனைத்தும் கம்ப்யூட்டர் மூலமே நடைபெறுகின்றன.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் அமெரிக்க வெளியுறவு அமைச்சக கம்ப்யூட்டரில் ஹார்ட்வேர் பிரச்சினை ஏற்பட்டதால் விசா நடைமுறைகள் முழுமையாக பாதிக்கப்பட்டன.

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜான் கெர்பி செய்தியாளர்களிடம் கூறியது: அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் உள்ள அரசு சார்ந்த மற்றும் அரசு சாராத கம்ப்யூட்டர் வல்லுநர்கள் உதவியுடன் பிரச்சினையை தீர்க்க முயற்சி எடுத்துள்ளோம்.

எதிர்பார்க்காத இந்த பிரச்சினையால் விசா நடைமுறையில் முக்கிய அம்சங்களான பயோமெட்ரிக் தகவல் பரிசோதனை உள்ளிட்டவற்றை நடத்த முடியவில்லை. இதனால் பாதிக்கப்பட்டுள்ள அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம். இதனால் அமெரிக்க பாதுகாப்புக்கு எவ்வித பிரச்சினையும் ஏற்படாது. மிக விரைவில் இந்த பிரச்சினை சரிசெய்யப்படும் என்று அவர் கூறினார்.

SCROLL FOR NEXT