நியூசிலாந்து நாட்டுக்கான இந்தியத் தூதர் ரவி தாப்பரை நாடு திரும்புமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தூதரக ஊழியர் ஒருவரை ரவியின் மனைவி தாக்கியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை தொடர்ந்து ரவி மீண்டும் டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நியூசிலாந்தில் ரவி தாப்பரின் வீட்டில் பணியாற்றி வந்த தலைமை சமையல்காரர் கடந்த மே மாதம் 10-ம் தேதி இரவு வீட்டை விட்டு வெளியேறினார். சுமார் 20 கி.மீ. நடந்து வெலிங்டன் நகருக்குச் சென்ற அவர் அங்கு மயங்கி விழுந்தார்.
இதையடுத்து காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட அவர், உடனே வீடு திரும்ப விரும்பாததால் தொடர்ந்து பல நாட்கள் அங்குள்ள விடுதியில் தங்கவைக்கப்பட்டார். ரவி தாப்பரின் மனைவி ஷர்மிளா தன்னை அடிமையாக நடத்தி வருவதுடன் தாக்கியதாகவும் அவர் புகார் கூறினார். இதுகுறித்த செய்தி நியூசிலாந்து ஊடகங்களில் வெளியானது.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த வெளியுறவு அமைச்சகம் சார்பில் கடந்த மாதம் ஒரு குழு நியூசிலாந்து அனுப்பி வைக்கப்பட்டது. இக்குழு அளித்த அறிக்கையில் அடிப்படையில் ரவி நாடு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் டெல்லியில் நேற்று கூறும்போது, “தூதரக ஊழியர் ஒருவரை காணவில்லை என்ற தகவல் கடந்த மே 10-ம் தேதி எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அந்த ஊழியர் தனது குற்றச்சாட்டை தொடர்ந்து வலியுறுத்தாத போதும் வெளியுறவு அமைச்சகம் இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தும். சம்பந்தப்பட்ட தூதரக ஊழியர் கடந்த மே 28-ம் தேதி நாடு திரும்பி விட்டார். நியூசிலாந்து தூதர் ரவி தாப்பர் மீண்டும் டெல்லியில் நியமிக்கப்பட்டுள்ளார். குற்றச்சாட்டின் உண்மையை அறிவதற்காக நியூசிலாந்து அனுப்பி வைக்கப்பட்ட குழு, இப்பிரச்சினையை சுமுகமாக தீர்க்க அந்நாட்டு போலீஸார் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியது” என்றார்.
இதனிடையே ரவி தாப்பர் நேற்று டெல்லி திரும்புவதற்கு ஆயத்தமானார் என்று நியூசிலாந்து ஊடகங்கள் தெரிவித்தன. ரவி தாப்பர் 1983-ம் ஆண்டு ஐஎப்எஸ் அதிகாரி ஆவார்.