உலகம்

உளவு பார்க்கவில்லை: பிரான்ஸ் அதிபரிடம் ஒபாமா விளக்கம்

பிடிஐ

பிரான்ஸ் நாட்டு அதிபர்களை என்.எஸ்.ஏ. உளவு பார்க்கவில்லை என்றும், எதிர்காலத்திலும் இந்த செயல் நடக்காது என்றும் அமெரிக்க அதிபர் ஒபாமா பிரான்ஸ் அதிபர் ஹாலந்தேயிடம் கூறினார்.

விக்கிலீக்ஸ் ஆவணங்கள் தொடர்பாக, பிரான்ஸ் அதிபர் ஹாலந்தேயிடம் நேற்று (புதன்கிழமை) இரவு அமெரிக்க அதிபர் ஒபாமா தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.

அவர் பேச்சு தொடர்பான அறிக்கையை வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜோஷ் ஏர்னெஸ்ட் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

அவர் கூறும்போது, "அமெரிக்க பாதுகாப்பு மையம் உங்களது உரையாடல்களை உளவு பார்க்கவில்லை. பிரான்ஸை உளவு பார்ப்பதில்லை என்று 2013-ல் மேற்கொண்ட ஒப்பந்தத்தை இப்போதும் பின்பற்றி வருகிறோம்.

தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்ற அபாய நிலையில் மட்டுமே வெளிநாட்டு புலனாய்வு நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்கிறோம்.

பிரான்ஸ் மக்களை பாதுகாக்கும் பொறுப்பை அந்நாட்டு அரசுடன் அமெரிக்காவும் இணைந்து மேற்கொள்கிறது என்றே கூற வேண்டும். தற்போதைய நிலையிலும், பிரான்ஸ் நாடு பயங்கரவாத அச்சுறுத்துலில் தான் இருக்கிறது.

பிரான்ஸ் குடிமக்களை பாதுகாக்கும் பணியை செய்துவருவதை நாங்கள் பெருமிதத்தோடு கூறிக்கொள்கிறோம்" என்று ஒபாமா ஹாலந்தேயிடம் கூறியதாக ஏர்னெஸ்ட் தெரிவித்தார்.

2006-ம் ஆண்டு முதல் பிரான்ஸ் நாட்டு அதிபர்களை அமெரிக்க பாதுகாப்பு அமைப்பான என்.எஸ்.ஏ. ஒட்டுகேட்டு உளவு பார்த்ததாக விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியது.

பிரான்ஸ் அரசியல் களத்தில் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய போதிலும், அமெரிக்க தூதருக்கு சம்மன் மட்டும் அளித்து மென்மையான முறையில் இந்த விவகாரத்தை பிரான்ஸ் கையாண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT