உலகம்

ஆப்கன் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய 6 தீவிரவாதிகளை தனிஆளாக சுட்டு வீழ்த்திய ராணுவ வீரர்

செய்திப்பிரிவு

ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத் தின் மீது தாக்குதல் நடத்திய 6 தீவிரவாதிகளை தனிஆளாக சுட்டுவீழ்த்திய ராணுவ வீரர் எஸா கானுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள நாடாளுமன்றம் மீது கடந்த 22-ம் தேதி தலிபான் தீவிர வாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

வெடிகுண்டுகள் நிரப்பிய காரை ஓட்டி வந்த தற்கொலைப் படை தீவிரவாதி நாடாளுமன்ற வாயிலில் மோதி வெடித்துச் சிதறினான். இதைத் தொடர்ந்து 6 தீவிரவாதிகள் நாடாளுமன்ற வளாகத்துக்குள் புகுந்து தானியங்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். கையெறி குண்டுகளை வீசினர். இதில் 19 பேர் காயமடைந்தனர்.

சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த சண்டையில் 6 தீவிரவாதிகளும் சுட்டு வீழ்த்தப்பட்டனர். அவர்கள் அனைவரையும் எஸா கான் (28) என்ற ராணுவ வீரர் தனிஆளாக சுட்டுக் கொன்றிருப்பது இப்போது தெரியவந்துள்ளது.

அவருக்கு அதிபர் அஷ்ரப் கனி உட்பட மூத்த அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பாராட்டுகளையும் பரிசுகளையும் வாரி வழங்கி வருகின்றனர்.

எஸா கானுக்கு அதிபர் அஷ்ரப் கனி மூன்று படுக்கை அறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு வீட்டை பரிசாக வழங்கியுள்ளார். ஒரு தொழிலதிபர் கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். சில எம்.பி.க் கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை அவருக்கு அன்பளிப்பாக வழங்கி யுள்ளனர். இவை தவிர நாடு முழு வதும் இருந்து எஸா கானுக்கு பாராட்டுகளும் பரிசுகளும் குவிந்து கொண்டே வருகின்றன.

தலைநகர் காபூலில் எங்கு திரும்பினாலும் எஸா கானின் போஸ் டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அவர் இப்போது ஆப்கானிஸ்தானின் சூப்பர் ஹீரோவாக மாறியுள்ளார். இதுகுறித்து எஸா கான் கூறியதாவது:

தலிபான்களிடம் சிக்கினால் உயிரோடு தோலை உரித்துவிடுவார்கள், அதனால் விலகி சென்றுவிடு என்று சில நண்பர்கள் ஆலோசனை கூறினர். ஆனால் நான் இறைவனின் துணையோடு தீவிரவாதிகளை துணிச்சலோடு எதிர்கொண்டு 6 பேரையும் சுட்டு வீழ்த்தினேன். அந்த கோழைகள் (தலிபான்கள்) இப் போது எனது குடும்பத்தை குறிவைத் திருப்பார்கள். அவர்களுக்கு அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT