இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்காவுக்கு அழைத்து வரவேற்க பராக் ஒபாமா நிர்வாகம் மிகுந்த ஆவலுடன் இருப்பதாக வெளியுறவு அமைச்சர் ஜான் கெரி தெரிவித்தார். இரு தரப்பு மற்றும் பிராந்திய பிரச்சினைகள் உள்ளிட்ட பல விவகாரங்கள் தொடர்பாக அமெரிக்காவுக்கான இந்திய தூதர் எஸ்.ஜெய்சங்கர், தன்னை சந்தித்தபோது மோடிக்கு இந்த தகவலை தெரிவிக்கும்படி கெரி கூறினார்.
வெளியுறவுத்துறை அதிகார வில்லியம் பர்னையும் ஜெய்சங்கர் சந்தித்து பல்வேறு பிரச்சினைகள் பற்றி விவாதித்தார். இந்தியாவின் 15-வது பிரதமராக பாஜக தலைவர் நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு உயர்நிலை இந்திய தூதர் ஒருவரை முதல் முறையாக சந்தித்தார் கெரி.
மோடியை அழைக்க ஒபாமா நிர்வாகம் மிகுந்த ஆவலுடன் இருப்பதாக ஜெய்சங்கருக்கு தெரிவித்த தகவலை வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ஜென் சாகி வெளியிட்டார். மோடி-நவாஸ் சந்திப்புக்கு அமெரிக்கா வரவேற்பு
பிரதமர் நரேந்திர மோடியும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபும் சந்தித்துப் பேசியதை அமெரிக்கா வரவேற்றுள்ளது. இரு அண்டைகளுக்கு இடையே உறவு மேம்படும் என்பதற்கான அடையாளம் இது என அமெரிக்கா நம்பிக்கையுடன் இருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது.
இது பற்றி ஒபாமா நிர்வாகத்தை சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மோடி-நவாஸ் சந்திப்பு ஆக்கபூர்வ அடையாளமாகவே இருக்கும் என கருதுகிறோம். இரு தரப்பு உறவு மேம்பட இந்த சந்திப்பு மிக முக்கியமானதாக இருக்கவேண்டும் என்பதே எங்கள் எண்ணம். மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க இந்தியா விடுத்த அழைப்பை ஏற்று நிகழ்ச்சியில் நவாஸ் பங்கேற்றது ஆக்கபூர்வமானதாகும்.
90களிலும் பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் இருந்தபோது பாஜக ஆட்சிக்கு வந்தது. அப்போதும் இரு நாடுகளுக்கும் இடையே உறவு மேம்பட்டது, அதையே இப்போதைய நடவடிக்கையும் நினைவுபடுத்துகிறது.இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.