இரண்டாம் உலகப்போரின்போது அணுகுண்டு தாக்குதலுக்கு உள்ளான ஹிரோஷிமா நகரில் ஜி 7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர். இதை ஜப்பான் நேற்று அறிவித்தது.
இந்த நகருக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஒருவர் வருவது இதுதான் முதல்முறை.
70 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க ராணுவம் ஹிரோஷிமா நகர் மீது அணுகுண்டை வீசியது இதில் அந்த நகரமே முழுமையாக அழிந்தது. ஜி 7 அமைப்பில் உள்ள பல நாடுகள் இப்போது அணு வல்லரசுகளாக திகழ்கின்றன. அந்த நாடுகளின் அமைச்சர்கள் ஹிரோஷிமாவில் கூட உள்ளனர்.
அவர்கள் அணுகுண்டு வீசப்பட்ட பகுதியைப் பார்வையிடவும் அங்கு என்ன நேர்ந்தது என்பதை அறியவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஜி7 அமைப்பில் ஜப்பான், பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன. இதன் உச்சி மாநாடு 2016 மே 26, 27 தேதிகளில் ஜப்பானின் கான்சி கோஜிமா தீவில் நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் ஹிரோஷிமாவில் கூடி ஆலோசனை நடத்த உள்ளனர்.
இரண்டாம் உலகப்போரின் போது தொழில் நகரமாக திகழ்ந்த ஹிரோஷிமா மீது 1945 ஆகஸ்ட் 6-ம்தேதி அணுகுண்டு வீசப்பட்டது. இதில் நகரம் அடியோடு நாசமா கியது. ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.
சில தினங்களுக்கு பிறகு நாகசாகி மீது இன்னொரு அணு குண்டை அமெரிக்கா வீசியது. இதில் 74000 பேர் கொல்லப்பட்டனர். செய்வதறியாது நின்ற ஜப்பான் 1945 ஆகஸ்ட் 15-ல் நேசப்படைகளிடம் சரணடைவதாக அறிவித்தது.
ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்ட இடம் அமைதி நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ளது. அங்கு அணுகுண்டால் ஏற்படும் அழிவுகளை விவரிக்கும் வகையில் அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டுள்ளது.