கியூபாவைப் பற்றிய சில சுவாரசியத் துணுக்குகளை அந்த நாடு குறித்த இந்தக் கடைசி அத்தியாயத்தில் கூடப் பகிர்ந்து கொள்ளாவிட்டால் எப்படி?
கியூபாவை உள்ளூர்வாசிகள் ‘எல்கோ கேட்ரீலோ’ எனவும் அழைப்பதுண்டு. இதன் அர்த்தம் முதலை. கியூபாவின் வடிவம் அத்தகையது என்பதால் இந்தப் பெயர்.
கியூபாவின் தேசியப் பறவை கியூபன் ட்ரோகோன். இதன் இறக்கைகள் சிவப்பு, வெள்ளை, நீலம் ஆகிய வண்ணங்களைக் கொண்டவை. இதே வண்ணங்கள் கொண்டதுதான் கியூபாவின் தேசியக் கொடி.
பிரபல ஆங்கில இலக்கியவாதி எர்னட்ஸ்ட் ஹெமிங்வேயின் மிகச் சிறந்த படைப்பு ‘’தி ஓல்ட் மேன் அண்ட் தி ஸி’’. இதை எழுதத் தூண்டுதலாக அவருக்கு அமைந்த இடம் கோஹிமர். இது கியூபாவின் தலைநகர் ஹவானாவின் புறநகர்ப் பகுதியில் உள்ளது.
பீட்டில்ஸ் இசைக் குழுவில் ஒருவரான ஜான் லென்னனுக்கு இங்கு சிலை உண்டு. வரடெரோ என்ற பகுதியில் வெண் மணல் கடற்கரைகள் மிகப் பிரபலம். சுற்றுலாப் பயணிகளின் விருப்பத் தேர்வு இப்பகுதிகள்.
இசைக்குப் பெயர்பெற்ற நாடு கியூபா. சல்சா, மாம்போ போன்ற நடன இசைப் பிரிவு கள் கியூபாவைத் தாயகமாகக் கொண்டவை. அவர்கள் இசை மிக வித்தியாசமாக இருப்பதற்கு ஒரு முக்கிய காரணம் அவை ஆப்ரிக்க மற்றும் ஸ்பானிஷ் தாளக்கட்டைகளை அடிப்படையாகக் கொண்டிருப்பதுதான்.
ஜமைக்காவுக்கு சமீபத்தில் சென்றிருந்த போதுதான் அமெரிக்க அதிபர் ஒபாமா இப்படிக் கூறியிருக்கிறார். ‘’ஐம்பது வருடங் களாக ஒரு செயல்முறை ஒத்துவரவில்லை என்றால் புதியதாக எதையாவது முயற்சிப்பதுதானே இயல்பானது?’’.
அமெரிக்காவுக்கும், கியூபாவுக்கும் உள்ள உறவைத்தான் இப்படிக் குறிப்பிட்டி ருக்கிறார் ஒபாமா. அமெரிக்க கண்டத்தின் நாடுகளுக்கான மாநாடு ஒன்றில்தான் ஒபாமாவும் ரால் காஸ்ட்ரோவும் சந்திக்க நேர்ந்தது.அந்த மாநாட்டின் வேறொரு நிகழ்வாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, கியூபாவின் வெளிநாட்டு அமைச்சர் ப்ரூனோவுடன் பேசியது மற்றொரு புதிய ஆரம்பம்.
அமெரிக்காவைப் பொறுத்தவரை பயங்கரவாத நாடுகள் என்ற ஒரு பட்டியலை அது எப்போதும் வைத்திருக்கும். இப்போது அந்தப் பட்டியல் சுருங்கி விட்டது. ஈரான், சூடான், சிரியா, கியூபா ஆகிய நான்கு நாடுகள்தான் அதில் உள்ளன. இதிலிருந்து கியூபா நீக்கப்பட வாய்ப்பு கூடி இருக்கிறது.
கியூபா மற்றும் அமெரிக்க அதிபர்கள் கடந்த ஐம்பது வருடங்களில் சந்தித்தது மிகக் குறைவு. 2013ல் நெல்சன் மண்டேலாவின் இறுதி ஊர்வலத்தில் சந்தித்தபோது ஒபாமாவும், காஸ்ட்ரோவும் கைகுலுக்கிக் கொண்டார்கள். அதையே அப்போது அந்த இரு நாடுகளின் பெருவாரியான மக்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
விரைவில் இந்த இருநாடுகளும் தூதரக அலுவலகங்களை மற்ற நாட்டில் தொடங்கவிருக்கும் என்கிறார்கள்.
மதத்தைப் பொறுத்தவரை கூட கியூபா வில் குறிப்பிடத்தக்க சில மாற்றங்களைக் காண முடிகிறது. மதங்களுக்கு எதிரான அரசாகத்தான் கியூபா இருந்து வந்திருக் கிறது. ஆனால் 1991ல் சோவியத் யூனியன் சிதறியபின் மதங்களுக்கான தனது எதிர் நிலையை குறைத்துக் கொண்டிருக்கிறது கியூபா அரசு. என்றாலும்கூட அரசு வேலை களுக்கு விண்ணப்பிக்கும்போது உங்கள் மதம் எது என்பதை நீங்கள் குறிப்பிட்டி ருந்தால் உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப் படவே வாய்ப்பு அதிகம்.
கியூபாவில் வசிப்பவர்களில் 60 சதவீதம் பேர் தங்களை கத்தோலிக்கர்கள் என்று கூறிக் கொள்கிறார்கள். இவர்களில் பலரும் மாதா கோவில்களுக்குச் செல்வதில்லை என்பது வேறு விஷயம். இந்த நிலையில் கியூபாவில் கத்தோலிக்கப் பிரிவின் ஒரு புதிய வடிவமாகத் தோன்றிய சன்டேரியா என்ற பிரிவு (இது கத்தோலிக்கம், யோருபா ஆகிய இருமதங்களும் இணைந்த கலவை எனலாம்) மெல்ல மெல்ல பலம் பெற்று வருகிறது.
இந்தப் பிரிவில் பாதிரியார்கள் திருமணம் செய்து கொள்ளலாம். பெண்கள்கூட பாதிரி ஆகலாம். இதுபோன்ற பாதிரியார்கள் திருமண வாழ்வு குறித்து கூட கவுன்சிலிங் செய்யலாம். பகிரங்கமாகத் தங்களை ஓரினச் சேர்க்கையாளர்கள் என்று அறிவித்துக் கொள்பவர்கள்கூட இந்த மதத்தில் தாராளமாக உறுப்பினர் ஆகலாம்!
ஐந்து தலைமுறை பகைமையை அமெரிக்காவும், கியூபாவும் நீக்கிக் கொள்வதால் கியூபாவுக்கு சில உடனடி ஆதாயங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. முக்கியமாக கியூபாவில் சுற்றுலாப் பயணிகளால் கிடைக்கும் நிதி என்பது இந்த வருடமே 17 சதவீதம் அதிகமாகுமாம்.
சென்ற வருடம் கியூபாவின் பொருளாதாரம் வெறும் 1.3 சதவீதம்தான் அதிகரித்தது. ஆனால் அமெரிக்காவுடன் நேசப்போக்கை கடைப்பிடிப்பதால் இரண்டரை பில்லியன் டாலர் முதலீடு கியூபாவில் இந்த ஆண்டு செய்யப்படும் என்ற நம்பிக்கையும் தோன்றி இருக்கிறது.
ஆனால் நிதி உதவிகள் எல்லாம் கூடவே நிபந்தனைகளுடன்தான் வரும். இவை ரால் காஸ்ட்ரோவுக்கு புதிய சங்கடங்களை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. அவரது கொஞ்சநஞ்சம் இருக்கும் சோஷலிஸ செயல் முறைகளுக்கு மூடுவிழா நடத்த வேண்டி வரலாம். இலவசக் கல்வி, இலவச ஆரோக்கியம் என்றெல்லாம் அங்குள்ள சில பொதுநலத் திட்டங்கள் கேள்விக்குறியாகிவிட வாய்ப்பு உண்டு.
(உலகம் உருளும்)