உலகம்

மக்களை மதிக்காத மியான்மர் - 4

ஜி.எஸ்.எஸ்

பர்மாவின் விடுதலை இயக்கத் தலைவர் ஆங் சான் படுகொலை செய்யப்பட்ட பிறகு அந்த இயக்கத்தின் உதவித் தலைவராக விளங்கிய யூ நூ சுதந்திர பர்மாவின் முதல் பிரதமர் ஆனார். மாணவப் பருவத்திலிருந்தே இவர் ஆங் சானுக்குத் தோள் கொடுத்தவர். அடுத்தடுத்து நடை பெற்ற இரண்டு பொதுத் தேர்தல்களில் இவரது கட்சிதான் மெஜாரிட்டியைப் பெற்றது.

மூன்றாவது முறை அவர் பிரதமராகப் பதவியேற்றபோது ஒரு சிக்கல். அவரது இயக்கத்தில் பிளவு தோன்றியது. யூ நூவுக்கு அவரது கட்சியிலேயே எதிர்ப்பாளர்கள் தோன்றினார்கள். யூ நூவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. நூலிழை யில் அதில் தப்பித்தார் யூ நூ. நிலைமையை சமாளிக்க யூ நூ எடுத்த ஒரு முடிவு பர்மாவின் தலை எழுத்தையே மாற்றி அமைத்தது.

‘’நான் தொடர்ந்து நாட்டின் தலைவனா கவே இருக்கிறேன். ஆனாலும் இந்த நாட்டின் சட்ட ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டுமானால், ராணுவ ஆட்சி நடைபெற்றால் மட்டும்தான் அது சாத்தியம்’’ என்று அறிவித்தார். எதிரணி பிரமித்தது. ராணுவத் தளபதி நெ வின் என்பவர் அதிகாரத்தைக் கைப்பற்றத் தொடங்கினார். ராணுவம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகார ருசியைக் கண்டது. யூ நூவும் ‘நாட்டின் தலைவராக இருக்கிறோம். நம் இயக்கத்தில் எனக்கு எதிராகக் கிளம்பியவர்களின் வாயை அடைத்து விட்டோம்’ என்பதில் திருப்தி அடைந்தார்.

1960ல் பொதுத் தேர்தல்கள் நடந்தன. மீண்டும் யூ நூ தேர்தலில் வென்றார். அவரிடம் மீண்டும் ஆட்சியை ஒப்படைத்தார் நெ வின்.

ஆனால் அடுத்த இரண்டாவது வருடமே ராணுவப் புரட்சியை நடத்தி மீண்டும் ஆட்சியைத் தன்வசம் கொண்டு வந்தார் நெ வின். ‘’வேறுவழியில்லை. பர்மாவின் அரசியல் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. போராட்டத்தைக் கட்டுப்படுத்த இரும்புக்கரம் வேண்டும். எனவே முழுமையான ராணுவ ஆட்சி இருந்தால்தான் பர்மாவுக்கும் நல்லது’’ என்று விளக்கமும் அளித்தார்.

தன்னைப் பிரதமராகவும் அறிவித்துக் கொண்டார். ‘ரத்தம் சிந்தாத புரட்சி’ என்று தன் ஆட்சிப் பறிப்பை அவர் விவரித்துக் கொள்ள, பல சர்வதேச ஊடகங்களும் அதை வழிமொழிந்தன!

‘என்னவோ தெரியவில்லை, நாடாளு மன்ற ஜனநாயம் எங்கள் நாட்டுக்கு ஒத்து வரவில்லை’ என்று பொய்யாக ஆதங்கப் பட்டார் நெ வின். அரசியலமைப்பு சட்டம் தூக்கி எறியப்பட்டது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

நாட்டில் ஆங்கங்கே புரட்சி வெடித்தது. முக்கியமாக ரங்கூன் பல்கலைக்கழக மாணவர்கள் கொதித்தெழுந்தனர். அங்குள்ள சில பேராசிரியர்களும்தான். நெ வின் அரசு நடவடிக்கை எடுத்தது. அந்தப் பேராசிரியர்கள் கொல்லப்பட்டனர். மாணவர் சங்கக் கட்டடம் இடிக்கப்பட்டது.

‘’வாளுக்கு வாள், ஈட்டிக்கு ஈட்டி என்பதுதான் எங்கள் செயல்படாக இருக்கும்’’ என்று வானொலியில் கர்ஜித்தார். மாணவர் களுக்கெதிரான கோபம் அப்போதும் அவருக்கு அடங்கவில்லை. நாட்டின் அத்தனை பல்கலைக்கழகங்களையும் காலவரையின்றி இழுத்து மூடினார். இரண்டு வருடங்களுக்கு மாணவர்களுக்கு மேல்படிப்பு என்பதே இல்லாமல் போனது.

ஒன்று இரண்டல்ல, 26 வருடங்கள் ஆட்சி செய்த பிறகு போனால் போகிறது என்று பதவியை ராஜினாமா செய்தார் நெ வின். போகிற போக்கில் ‘’பர்மாவின் அரசியல் அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதை மக்களே தீர்மானிக்கலாம்’’ என்றும் அறிவித்தார்.

அடுத்து தலைமை ஏற்றவர் தளபதி ஸா மவுங். பழைய ராணுவப் பிரதமர் அறிவிப்பைத் தொடர்ந்து மக்கள் ‘ஜனநாயக அமைப்புதான் எங்களுக்கு வேண்டும். அப்படித்தான் பர்மாவின் அரசியல் அமைப்பு இருக்கவேண்டும்‘’ என்று குரல் கொடுத்தனர்.

ராணுவ ஆட்சி இதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. ‘’மக்களே தீர்மானிக்க லாம் என்று கூறிவிட்டு எங்கள் கருத்துக்கு மதிப்பளிக்கவில்லை என்றால் எப்படி?’’ என்று போராட்டங்கள் எழுந்தன. ராணுவம் அடக்குமுறையை ஏவிவிட்டது. அதிகமாகக் குரல் கொடுத்த மக்கள் ஆட்சி ஆதரவாளர்கள் சத்தம் போடாமல் கொலை செய்யப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து தளபதி ஸா மவுங் ஒரு அமைப்பைத் தொடங்கினார். அந்த அமைப்பின் பெயர் ‘ஸ்லார்க்’. இதன் விரிவாக்கம் தேசிய சட்ட ஒழுங்கு மீட்புக் குழு. பெயர் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் அதன் மூலமாக அவர் காட்டியதெல்லாம் பலாத்காரம்தான்.

பர்மா கொந்தளிக்கத் தொடங்கியது. அதே சமயம் அது கடும் சித்ரவதைக்கும் உட்பட்டிருந்தது. அதே சமயம் ஆங்கிலேயரான மைக்கேல் ஹாரிசைத் திருணம் செய்து கொண்டிருந்த ஆங் சான் சூச்சியின் திருமண வாழ்வு இனிமையாகவே நகர்ந்து கொண்டிருந்தது. அலெக்ஸாண்டர், கின் என்று அடுத்தடுத்துப் பிறந்த இரண்டு மகன்கள் அந்த வாழ்வை மேலும் இனிமையாக்கிக் கொண்டிருந்தனர்.

அப்போதுதான் அவருக்கு வந்து சேர்ந்தது ஓர் அழைப்பு. அனுப்பியவர் அவரது தாய். ‘’நான் மிகவும் நோய்வாய் பட்டிருக்கிறேன். உடனே பர்மாவுக்குத் திரும்பு’’. பதற்றத்துடன் பர்மாவை அடைந்தார் ஆங் சான் சூச்சி. மிகமிக மோசமாகத்தான் இருந்தது – அவரது தாயின் உடல் நிலையும், பர்மாவின் நிலையும்.

(உலகம் உருளும்)

SCROLL FOR NEXT