ஜெர்மனியில் ஒரு பூனை கடித்ததால் ஆத்திரமடைந்த ஒரு பெண், அதன் உரிமையாளரான தனது காதலனைக் கடித்ததுடன் அவரை சரமாரியாக தாக்கி உள்ளார்.
இதுகுறித்து காவல் துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது:
வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா மாகாணம் ஹேகன் நகரைச் சேர்ந்த 26 வயது பெண்ணை, அவரது காதலன் வீட்டு பூனை கடித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், பூனையின் உரிமையாளரான தனது காதலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் காதலனை சரமாரியாக தாக்கிய அந்தப் பெண், அவரை பல தடவை கடித்துள்ளார்.
இதுகுறித்து காவல் துறையில் புகார் செய்வதற்காக முயற்சித்த காதலனின் கையிலிருந்த செல்போனை பிடுங்கிக் கொண்டார் அந்தப் பெண். இதையடுத்து, அங்கிருந்து தப்பிச் சென்ற அந்தப் பெண்ணின் காதலன் காவல் துறையினருக்கு புகார் கொடுத்துள்ளார்.
தொடர்ந்து சம்பவ இடத் துக்குச் சென்ற காவல் துறையினர் அந்தப் பெண்ணை மருத்துமனையில் சேர்த்துள்ளனர். மேலும் காதலனை கொடுமைப்படுத்தியதாக அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 10 நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே செல்ல அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.