உலகம்

காணாமல் போன மலேசிய விமானமும் யூகங்களின் ஆதிக்கமும்

செய்திப்பிரிவு

மார்ச் 8ஆம் தேதி கோலாலம்பூரிலிருந்து புறப்பட்ட எம்.எச்.370 போயிங் விமானம் பீஜிங் செல்லும் வழியில் 239 பயணிகளுடன் மாயமானது. இதனைத் தேடும் பணி வியர்த்தமாக, முடிய கடைசியில் வெறும் யூகங்களே தற்போது பெரிதாகப் பேசப்பட்டு வருகிறது.

அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ அந்த விமானத்தைக் கடத்தி வைத்துள்ளது என்ற ஒரு யூகத்தை மலேசிய முன்னாள் பிரதமர் மஹாதிர் மொகமட் தனது வலைப்பதிவில் வெளியிட பெரும் அதிர்ச்சி எழுந்தது. அதுமட்டுமல்லாமல் அது சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்றும் யூகங்கள் வெளியாகியுள்ளது.

மலேசிய முன்னாள் பிரதமர் எழுதிய கட்டுரையில், விமானம் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டிற்குச் செல்லும் முன் ரிமோட் கண்ட்ரோல் மூலம் சிஐஏ விமானத்தை தன் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்திருக்கலாம் என்றும் யாரோ எதற்காகவோ உண்மையை மறைத்து வருகின்றனர். ஏதோ காரணங்களுக்காக சிஐஏ பற்றியும் போயிங் நிறுவனம் பற்றியும் பத்திரிக்கைகள் எழுதுவதில்லை என்றும் அவர் தன் ஐயத்தை எழுப்பியிருந்தார்.

ஆனால் மஹாதிர் மொகமட் ஒரு கடும் மேற்கத்திய எதிர்ப்பாளர் என்பதும் இங்கு உற்று கவனிக்கத்தக்கது. கேன்ஸ் திரைப்பட விழாவில் "The Vanishing Act" என்ற திரைப்படத்தின் ட்ரெய்லர் காண்பிக்கப்பட்டுள்ளது. இது காணாமல் போன மலேசிய விமானம் பற்றிய கதையமைப்பைக் கொண்டதாம்.

இந்த மாயமான விமானத்தின் புதிர்க்கதையை மையமாகக் கொண்டு வெளியான புத்தகம் ஒன்றில் தெற்கு சீனக் கடலில் ராணுவப் பயிற்சியின் போது இந்த விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டு விஷயம் முற்றிலும் மூடி மறைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சிஐஏ-யிற்கு நிச்சயம் இந்த விமானம் என்ன ஆனது என்று தெரியும் ஆனால் அவர்கள் தகவல்களை பரிமாறிக்கொள்ள விரும்பவில்லை என்ற புதிய குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகிறது.

மலேசியாவின் முன்னாள் பிரதமர் மஹாதிர் மொகமட் கூறும் இன்னொரு விஷயமும் அதிர்ச்சி அலைகளை எழுப்பியுள்ளது. அதாவது போயிங் நிறுவனம் 2006 ஆம் ஆண்டே ஒரு தொழில்நுட்பத்தை தன்வயப்படுத்தியுள்ளது, போயிங் விமானத்தை இயக்கும் பைலட்களிடமிருந்தே கட்டுப்பாட்டை தங்கள் வசம் அந்த நிறுவனம் கொண்டு வர முடியும் என்று கூறியுள்ளார்.

உண்மை என்னவென்று கண்டுபிடிக்காத நிலையில் ஆங்காங்கே யூகங்களும், கற்பனைகளும் காணாமல் போன மலேசிய விமானம் என்ற புதிர்ப் புத்தகத்தின் பக்கங்களை நிரப்பி வருகின்றன.

SCROLL FOR NEXT