உலகம்

தமிழ் ஆர்வத்தைத் தூண்ட செல்போன் ‘ஆப்’: சிங்கப்பூர் அரசு அறிமுகம்

பிடிஐ

மக்கள் மத்தியில் தமிழ் ஆர்வத்தைத் தூண்டவும் இளம் குழந்தைகள் தமிழை எளிதாக புரிந்துகொள்ளவும் ‘அரும்பு’ என்ற பெயரில் செல்போன் செயலியை (ஆப்) சிங்கப்பூர் அரசு அறிமுகம் செய்துள்ளது.

சிங்கப்பூரில் 14-வது தமிழ் இணையதள மாநாடு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் தமிழ் பேசக்கூடிய சிங்கப்பூரைச் சேர்ந்த 150 பேரும் 10 நாடுகளிலிருந்து வந்த 200 பேரும் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் அரும்பு என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த மாநாட்டின் தொடக்க விழாவில் அந்நாட்டு பிரதமர் அலுவலக அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் பேசியதாவது:

சிங்கப்பூரின் 4 அலுவல் மொழி களில் ஒன்றாக திகழ்கிறது தமிழ். இந்த மொழியைப் பரப்பு வதற்காக தொழில் நுட்பத்தைப் பயன் படுத்தும் நடவடிக்கையை சிங்கப்பூர் அரசு எப்போதும் ஆதரித்து வருகிறது.

அந்த வகையில் இப்போது, அரும்பு அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. பள்ளியில் சேரத் தயாராக உள்ள குழந்தைகளும் இதன் மூலம் விரைவில் பயனடைவார்கள். இந்த செயலி, இளம் குழந்தைகள் மத்தியில் தமிழ் மொழி குறித்த ஆர்வத்தைத் துண்டக்கூடிய ஒலி, ஒளி காட்சியைக் கொண்டிருக்கும்.

தமிழ் மொழி பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் ‘சிங்கை அகரம்’ என்ற மென் பொருள் மற்றும் செல்போன் செயலி ஏற்கெனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஆங்கிலத்திலிருந்து தமிழ், தமிழிலிருந்து தமிழ் பொருள் அறிவதற்கான டிஜிட்டல் டிக் ஷ்னரி ஆகும்.

எந்த ஒரு மொழியும் வழக்கத்தில் நீடித்திருக்க வேண்டுமானால், அந்த மொழியைப் பயன்படுத்துமாறு இளம் தலைமுறையினரை தூண்ட வேண்டும்.

அவ்வாறு செய்யாத காரணத்தால் பல மொழிகள் வழக்கொழிந்து வருகின்றன.

தமிழ் மொழியையும் தொழில் நுட்பத்தையும் இணைக்க அதிக முயற்சி மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான், அந்த மொழி நீண்ட காலத்துக்கு நீடித்திருக்கும். மேலும் தமிழ் மொழியின் பாரம் பரியத்தைக் கொண்டாடுமாறு எதிர்கால சந்ததியினரை ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு ஈஸ்வரன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT