"பாகிஸ்தான் ராணுவ தளவாடங்கள் வெறும் அலங்காரப் பொருட்கள் இல்லை. தேவைப்பட்டால் இந்தியாவுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்" என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவம் அண்மையில் மியான்மர் எல்லைக்குள் புகுந்து அங்கு முகாமிட்டிருந்த என்எஸ்சிஎன் (கப்லாங்) தீவிரவாதிகளை அழித்தது. இதனை ஆதரித்து இந்திய அரசியல் தலைவர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர்.
அண்மையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் ராஜ்யவர்த்தன் ரத்தோர், "மியான்மரில் நடத்தப்பட்ட இந்திய தாக்குதல் இந்தியா மீது தீவிரவாதத்தை கட்டவிழ்க்கும் பிற நாடுகளுக்கு ஓர் எச்சரிக்கை. இத்தாக்குதலுக்கு அனுமதி கொடுத்ததன் மூலம் பிரதமர் மோடி ஒரு துணிச்சலான முடிவை எடுத்துள்ளார்" எனக் கூறியிருந்தார்.
இதற்கு பாகிஸ்தான் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், மியான்மர் போல் தங்கள் நாட்டுக்குள் யாரும் அத்துமீறி தாக்குதல் நடத்த முடியாது எனக் கூறியது.
இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) கலந்து கொண்டு பேசிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிப், "பாகிஸ்தான் ராணுவ தளவாடங்கள் வெறும் அலங்காரப் பொருட்கள் இல்லை. தேவைப்பட்டால் இந்தியாவுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம்.
வெறுப்புணர்வுகளை தூண்டும் வகையில் இந்திய அரசியல் தலைவர்கள் வெளியிட்டுவரும் அறிக்கைகள் தீவிரவாததுக்கு எதிரான பாகிஸ்தானின் கவனத்தை திசை திருப்புவதாக உள்ளது. பாகிஸ்தானில் தீவிரவாதத்தை இந்தியாவே பரப்பி வருகிறது" என்றார்.
மேலும் அவர் கூறும்போது, "இந்தியாவின் வெறுப்பு அறிக்கைகள் குறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் கவனத்துக்கு பிரதமர் நவாஸ் ஷெரீப் கொண்டு சென்றுள்ளதாகக் கூறினார்.