உலகம்

மக்களை மதிக்காத மியான்மர்- 5

ஜி.எஸ்.எஸ்

நெ வின் தலைமையில் ராணுவ ஆட்சி நடந்து கொண்டிருந்த காலகட்டம் அது. ஆங் சான் சூச்சி நோய்வாய்ப்பட்டிருந்த தனது தாயாரை பார்ப்பதற்காக பர்மா வந்து சேர்ந்தார்.

மகளைப் பார்த்தவுடன் தாயாருக்கு மகிழ்ச்சி. அந்த மகளைப் பார்த்தவுடன் மக்களுக்கும் மகிழ்ச்சி. அந்த அளவுக்கு மறைந்த ஆங் சானை மக்கள் நேசித்தனர்.

தாயின் உடல்நிலை சரியானவுடன் மீண்டும் கணவரிடமே திரும்பிவிட வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் பர்மாவுக்கு வந்திருந்தார் ஆங் சான் சூச்சி. ஆனால் சூழல் மாறியது. தினமும் கூட்டம் கூட்டமாக பர்மிய மக்கள் அவரின் வீட்டுக்கு வந்தனர். “உங்கள் தந்தை அந்தக் காலத்தில் விடுதலை இயக்கத்துக்குத் தலைமையேற்றார். இப்போதுள்ள ராணுவ ஆட்சியிலிருந்து பர்மாவை மீட்க வேண்டும். அதற்கு மீண்டும் ஒரு விடுதலை இயக்கம் தேவை. அதற்கு நீங்கள்தான் தலைமை ஏற்க வேண்டும்’’ என்று வற்புறுத்தினர். இது உங்கள் கடமை என்பதுபோல் சிலர் அழுத்தம் கொடுக்க, எங்களுக்காக இதைச் செய்யுங்கள் என்று சிலர் கண்ணீர் வடித்தனர். ஆங் சான் சூச்சி முடிவெடுக்க முடியாமல் தடுமாறினார்.

இந்த நிலையில்தான் ஒரு கொடூர நிகழ்வு பர்மாவில் நடைபெற்றது. அது நடந்த தேதி 8-8-88. இதன் காரணமாக அது பின்னர் உலக அரசியல் மேடையில் `துரதிருஷ்டமான நாலெட்டு’ என்று குறிப்பிடப்பட்டது.

அன்றுதான், விடுதலை வேண்டுமென்று கோரிக்கை விடுத்த நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவர்களை ராணுவ அரசு கொன்று குவித்தது. இந்த விஷயம் முடிந்தவரை நாட்டைவிட்டுப் பரவாமல் பார்த்துக் கொண்டது. இந்தக் கொடூரம் பற்றி விரிவாகவே பிறகு பார்க்கலாம்.

பர்மிய மக்களின் அதிர்ச்சி எல்லை மீறியது. ஆங் சான் சூச்சி கொந்தளித்தார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க அவரால் முடியவில்லை. போதாக்குறைக்கு உள்ளூர் மக்களின் நெருக்கடி வேறு. அவரது முயற்சியால் ஜனநாயக தேசிய அணி உருவானது. அதன் செயலாளராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ராணுவ அரசை விமர்சிக்கத் தொடங்கினார்.

அதற்கு அடுத்த மாதம் ஆங் சான் சூச்சியின் தாயார் இறந்தார். அவரது இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டார்கள். இதைப் பார்த்தவுடன் ராணுவ அரசுக்கு கிலி உண்டானது. `எதனால் இப்படியொரு மாபெரும் அளவில் மக்கள் திரள வேண்டும். மறைந்த ஆங் சான் மீது அவர்கள் கொண்ட மரியாதையை அவரது மனைவி மீதும் காட்டுகிறார்களா? இந்த ஆதரவு அவர்களின் மகள் ஆங் சான் சூச்சிக்கும் சென்று விடுமோ? அப்படியானால் நமது ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு அதிகமாகுமோ?’ என்று யோசிக்கத் தொடங்கியது.

ஆங் சான் சூச்சி அமைதியான முறையில்தான் போராடினார். `பர்மாவில் ஜனநாயகம் திரும்ப வேண்டும்’ என்பதுதான் அவரது முக்கிய போராட்டமாக இருந்தது. அதற்கே ராணுவ அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்தது. இதே சமயம் பிற உலக நாடுகளிலும் ஆங் சான் சூச்சியின் அமைதி வழிப் போராட்டம் பாராட்டுகளை குவித்துக் கொண்டிருந்தது. திடீரென அவரை `வீட்டுச் சிறையில்’ அடைத்தது ராணுவ அரசு. பூடானிலிருந்த ஆங் சான் சூச்சியின் கணவர் இதைக் கேட்டு வருந்தினார். பர்மாவுக்கு வர முடிவெடுத்தார். ஆனால் அவருக்கு தனது மனைவியைப் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது.

இப்படியெல்லாம் செயல்பட தங்கள் நாட்டின் ஒரு விதியைப் பயன்படுத்திக் கொண்டது ராணுவ அரசு.

வேற்று நாட்டைச் சேர்ந்த சோனியாவை ராஜீவ் காந்தி திருமணம் செய்து கொண்ட பிறகும், அவர் பிரதமர் ஆவதை நமது அரசியலமைப்புச் சட்டம் தடுக்கவில்லை. சொல்லப்போனால் பின்னொரு காலத்தில் சோனியா காந்தியே பிரதமராகும் கட்டம் வந்ததும் கடைசி நிமிடத்தில் அவரே அதை மறுத்ததாகச் செய்திகள் வந்ததும் நமக்குத் தெரியும். ஆனால் பர்மாவில் இதெல்லாம் நடக்காது.

வெளிநாட்டவரைத் திருமணம் செய்து கொண்ட யாருமே அங்கு நாடாளுமன்ற உறுப்பினராகக் கூட இருக்க முடியாது. இந்த சட்டப் பிரிவை கையில் எடுத்துக் கொண்டுதான் ஆங் சான் சூச்சி நேரடியாக அரசியலில் நுழையாமலும் தேர்தலில் நிற்க முடியாமலும் பார்த்துக் கொண்டிருக்கிறது ராணுவ அரசு.

(உலகம் உருளும்)

SCROLL FOR NEXT