மேற்கு இந்தோனேசியாவில் உள்ள சைனாபங் என்ற எரிமலையில் தொடர்ந்து சீற்றம் அதிகரித்து வருவதால் அப்பகுதியில் உள்ள கிராமங்களிலிருந்து சமீபமாக 10,000 பேர் வெளியேறியுள்ளனர்.
'பசிபிக் ரிங் ஆஃப் பயர்' என்று அழைக்கப்படும் சுமத்திரா தீவில் உள்ள சைனாபங் எரிமலை கடந்த மாதம் முதல் சீராக வெடித்துச் சீறிவருகிறது. இதனையடுத்து உச்சபட்ச உஷார் நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக செயலற்று கிடந்த சைனாபங் எரிமலை கடந்த 2013-ம் ஆண்டு முதல் உயிர்பெற்றது. கடந்த வாரம் திடீரென பெரிய அளவில் அது வெடித்துச் சிதற வானுயர சாம்பல் புகை எழுந்தது.
செவ்வாய்க்கிழமையான இன்றும் அந்த எரிமலை சீற்றம் அதிகரித்துள்ளது. கடந்த வார இறுதியில் சுமார் 7,500 பேர் கிராமங்களிலிருந்து வெளியேறியுள்ளனர்.
எரிமலைக்கு அருகே 6 கிராமங்கள் அபாய பகுதியில் உள்ளன. இதனையடுத்து கடந்த வார இறுதி வரை 10,174 பேர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
எரிமலையிலிருந்து 15 கிமீ தொலைவில் உள்ள பகுதியில் சாலைகளில் 2 மிமீ அடர்த்திக்கு சாம்பல் அப்பியுள்ளது.
இந்த எரிமலை காரணமாக இந்தோனேசிய பொருளாதாரமே ஆட்டம் கண்டு வருகிறது. உள்கட்டமைப்பு, விவசாயம், சுற்றுலா என்று எரிமலையினால் இந்தோனேசியா கடும் பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் இதன் சீற்றத்தினால் 100 மில்லியன் டாலர்கள் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
சைனாபங் எரிமலை இந்தோனேசியாவில் உள்ள 129 எரிமலைகளில் ஒன்று. கடும் நிலநடுக்கப் பகுதியில் இவை உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.