துருக்கியின் சோமா பகுதியில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலக்கரி சுரங்க வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 282 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், அரசின் தனியார் மயமாக்க முயற்சியும் முதலாளிகளின் லாப கண்ணோட்டமே விபத்துக்கு காரணமாக அமைந்து விட்டதாக கூறி துருக்கியில் உள்ள தொழிற்சங்கம் ஒன்று வியாழக்கிழமை வேலை நிறுத்தப் போராட் டத்துக்கு அழைப்பு விடுத்தது.
சுரங்கத்தில் உள்ள மின் மாற்றியில் ஏற்பட்டகோளாறால் வெடிவிபத்து ஏற்பட்டு சுரங்கம் சிதைந்தது. அதிலிருந்து தப்பி வெளிவரமுடியாமல் ஏராளமான தொழிலாளர்கள் இன்னும் சிக்கி உள்ளனர்.
தனியார் மயமாக்கக் கொள்கைக்கு ஆதரவாக செயல் படுவர்களால் தொழிலாளர்கள் தமது அன்றாடத் தேவைகளுக்கான செலவுகளையும் குறைக்க வேண்டியுள்ளது. சோமா பகுதியில் தொழிலாளர்கள் உயிரிழந்ததற்கு இத்தகையோரே காரணம் என துருக்கி பொது தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மனிசா மாகாணம் சோமா நகரில் இந்த சுரங்கம் உள்ளது. சுரங்கம் சிதைந்து வெளிவர முடியாமல் உள்ளே சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கான வாய்ப்பு அருகி விட்டதால் பொதுமக்கள் மத்தியில் கோபமும் விரக்தியும் காணப்படுகிறது.
அலட்சியப் போக்குடன் செயல்படுவதாக அரசையும், சுரங்கத் தொழில் துறையையும் குறை கூறி ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்காரா நகரிலும் இஸ்தான்புல் நகரிலும் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு போலீஸாருடன் மோத லில் ஈடுபட்டனர்.
விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணைக்கு உத்தர விடப்படும் என பிரதமர் ரெசப் தயீப் எர்டோகன் உறுதி அளித்துள்ளார். சுரங்க விபத்துக்கு அரசு மீது பழி சுமத்த முடியாது என்று தெரிவித்த பிரதமர் இத்தகைய சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும் என்றார்.
விபத்துக்குள்ளான சுரங்கத்தை பார்வையிடச் சென்ற பிரதமரை முற்றுகையிட்ட பொது மக்கள், அவர் பதவி விலக வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். அவர் நிருபர்களுக்கு பேட்டி கொடுத்த இடத்துக்குச் சென்ற பொதுமக்கள் அவரது வாகனத்தையும் தாக்கி சேதப்படுத்தினர். அங்காரா நகரின் முக்கிய பகுதியான கிஸிலே சதுக்கத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுமார் 4000 பேரை கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தண்ணீரையும் பீய்ச்சி அடித்து போலீஸார் கலைந்து போகச் செய்தனர்.