உலகம்

மக்களை மதிக்காத மியான்மர் - 3

ஜி.எஸ்.எஸ்

ஜப்பானுக்குச் சென்ற ஆங் சான் பின்னர் ரகசியமாக பர்மாவுக்கு வந்து சேர்ந்தார். ரகசிய உளவுத்துறை ஒன்றை உருவாககினார்.

ரங்கூன் 1942ல் பிரிட்டனிடமிருந்து ஜப்பான் கைக்குச் சென்றது. அப்போது மீண்டும் ஜப்பானுக்கு வரவழைக்கப்பட்ட ஆங் சானுக்குப் பெரும் கவுரவம் அளித்தது அந்த அரசு.

புதிய பர்மாவில் போர் அமைச்சர் பதவியை ஆங் சானுக்கு அளித்தது ஜப்பான். ஆனால் ஆங் சானுக்கு சந்தேகம் முளைவிடத் தொடங்கியது. உண்மையாகவே முழு சுதந்திரம் அளிக்கும் எண்ணம் ஜப்பானுக்கு இருக்கிறதா? விரைவிலேயே தனது சந்தேகம் நியாயமானதுதான் என்பதைப் புரிந்து கொண்டார். “பிரிட்டிஷார் எங்கள் ரத்தத்தைக் குடித்தார்கள் என்றால் ஜப்பானியர்கள் எங்கள் எலும்புகளை உடைத்தார்கள்’’ என்று ஆங் சான் கூறியதாக அவரது தளபதி ஒருவர் பின்னர் கூறியதுண்டு.

இந்தியாவில் உள்ள பிரிட்டிஷ் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டார் ஆங் சான். அப்போது இரண்டாம் உலகப்போரும் நடைபெற்றது. பிரிட்டனுக்கு உதவ ஒப்புக் கொண்டார் ஆங் சான்.

பதிலாக அவர் கேட்டது பர்மாவுக்கு முழு சுதந்திரம்.

ஜப்பானிடமிருந்து பர்மா மீட்கப்பட்டது. ஆங் சான் அதிபராக விளங்குவார் என்பது பரவலான எதிர்பார்ப்பாக இருந்தது.

ஒரு நாள் அவரும் வேறு ஆறு பேரும் (இந்த ஆறு பேரை தனது அமைச்சரவையில் ஆங் சான் சேர்த்துக் கொள்வதாக இருந்தார்) வருங்கால மியான்மர் குறித்து உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சில ராணுவ வீரர்கள் உள்ளே புகுந்து அத்தனை பேரையும் கொன்றனர். கொன்றது யார்? முன்னாள் ராணுவப் பிரதமர் யு ஸாவின் சதித் திட்டம்தான் இது என்று கருதப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டார். வழக்கு தொடுக்கப்பட்டது. தூக்கில் ஏற்றப்பட்டார். இந்த வழக்கில் வேறொரு விஷயமும் வெளியானது. கீழ் மட்டத்தில் இருந்த பிரிட்டிஷ் அதிகாரிகள் பர்மிய ராணுவத்தினருக்கும், அரசியல்வாதிகளுக்கும் துப்பாக்கிகளை விற்றார்கள் என்பதுதான் அது.

ஆக பர்மாவுக்கு அதிகாரப் பூர்வமான சுதந்திரம் வழங்கப்படுவதற்கு முன்பாகவே ஆங் சான் படுகொலை செய்யப்பட்டார். இதை அறிந்ததும் நாடே துக்கத்தில் ஆழ்ந்தது.

சுதந்திரம் பெற்ற பர்மாவில் ராணுவ ஆட்சிதான் அமைந்தது. என்றாலும் ஆங் சான் குடும்பத்தினர் மீது மக்களுக்கு இருந்த ராஜ மரியாதையை அரசு உணர்ந்தது. ஆங் சானின் மனைவியை பர்மாவின் இந்தியத் தூதராக நியமித்தது.

தனது இரண்டு வயது மகளோடு டெல்லி வந்து சேர்ந்தார் அந்த இளம் விதவைத் தாய். அங்கு இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நட்பு கிடைத்தது அவர்களுக்கு.

குழந்தையை நேருவுக்கு மிகவும் பிடித்து விட்டது. “தேவதைபோல இருக்கிறாள்’’ என்று அவளை அடிக்கடிக் குறிப்பிட்டார். அந்த தேவதை டெல்லியில்தான் தன் பள்ளிப் படிப்பை முடித்தாள்.

‘’இனி என்ன செய்யப் போகிறாய்?’’ என்று அம்மா கேட்க, பளிச்சென்று பதில் வந்தது மகளிடமிருந்து. “ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படிக்க மிகவும் ஆசையாக இருக்கிறது’’ என்றாள். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தூய ஹக் கல்லூரியில் சேர்க்கப்பட்டாள் ஆங் சான் சூச்சி.

அங்கு அறிமுகமானார் மைக்கேல் ஹாரிஸ். சக மாணவர். திபெத் மற்றும் இமயமலைப் பகுதிகளை தன் ஆராய்ச்சிப் பொருளாக எடுத்துக் கொண்டிருந்தார் மைக்கேல். இதன் காரணமாக ஆசிய நிலவரங்கள் அவருக்கு அத்துபடியாகி இருந்தன. ஆங் சூச்சியும் அரசியல் கவுரவம் மிக்க குடும்பத்திலிருந்து வந்தவர் என்பதால் பல விவரங்களை விரல் நுனியில் வைத்திருந்தார். இருவரும் தொடர்ந்து மணிக்கணக்காக உலக நடப்புகளைப் பேசுவதும், விமர்சிப்பதும் வழக்கமாயின. ஒரு கட்டத்தில் இந்த நட்பு காதலாக மாறியது. திருமணம் செய்து கொண்டனர்.

இதை அறிந்ததும் பல பர்மியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். “நமது பேரபிமானத்தைப் பெற்ற ஆங் சானின் மகள் ஒரு வேற்று நாட்டவனையா கல்யாணம் செய்து கொள்வது? அதுவும் நம்மை அடிமையாக வைத்திருந்த பிரிட்டனைச் சேர்ந்தவனையா?’’

இந்த விவரம் காதுகளை எட்டியதும் மைக்கேல் சற்று கவலைப்பட்டார். “நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டதைப்பற்றி உன் நாட்டு மக்களில் பலருக்கும் அதிருப்தியாமே’’ என்று மனைவியிடம் கேட்டார்.

‘’இருக்கலாம். ஆனால் என்னைப் பற்றிய எந்த உண்மையையும் நான் மக்களிடமிருந்து மறைக்க விரும்பவில்லை. எனக்கு நேரடியாகவும், நேர்மையாகவும்தான் எதையும் அணுகிப் பழக்கம். என் நாட்டு மக்கள் என்னைப் பற்றி போகப்போக புரிந்து கொள்வார்கள்’’ என்றார் கம்பீரமாக.

தன் தனி வாழ்வைத் தீர்மானிப்பது தானாகவே இருக்க வேண்டுமே தவிர, பொது மக்களல்ல என்று நினைத்தார் ஆங் சான் சூச்சி. ஆனால் அப்போது அவர் உணரவில்லை, தன் வருங்கால வாழ்வு மியான்மரின் அரசியலோடு பின்னிப் பிணைந்திருக்கப் போகிறது என்பதை.

(உலகம் உருளும்)

SCROLL FOR NEXT