சீனப் பெருஞ்சுவரில் சுமார் 30 சதவீதம் சேதமடைந்துவிட்டதாகவும், அக்கறையின்றி செங்கற்களை மக்கள் திருடுவதும் இயற்கை மாற்றமுமே இதற்கு காரணம் என்று பெய்ஜிங் டைம்ஸ் ஆய்வில் தெரிவித்துள்ளது.
யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட சீனப் பெருஞ்சுவர் எவ்வித இடைவெளியும் இன்றி ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் நீளம் கொண்டது. சான்காய்குவானில் இருந்து ஜியாயூகுவான் கோபி பாலைவனம் வரை இந்தச் சுவர் நீண்ட நெடிய தூரம் கொண்ட இது முற்றிலும் மனிதர்களின் உழைப்பால் ஆனது.
கி.மு. 3-ம் நூற்றாண்டில் ஆரம்பிக்கப்பட்ட சீனப்பெருஞ்சுவரின் கட்டுமான பணிகளில் சுமார் 6,300 கிலோ மீட்டர்கள் 1368 முதல் 1644 காலகட்டத்தில் மிங் வம்சத்தினரால் கட்டப்பட்டது. இதில், 1,962 கிலோ மீட்டர்கள் நீளம் உள்ள இச்சுவரானது பல வருடங்கள் ஆகிவிட்டதாலும், காற்று, மழை போன்ற இயற்கை மாற்றங்களாலும் சேதமடைந்து சிதைந்தது கடந்த 2014-ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்தது.
இந்த நிலையில் பெய்ஜிங் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில், "சுற்றுலா மற்றும் உள்ளூர்வாசிகளின் செயல்பாடுகளால் சீனப் பெருஞ்சுவர் பாதிக்கப்பட்டு பெருமளவில் அழிந்துவிட்டது. பழங்கால கற்கள் மற்றும் செங்கற்களால் ஆன கோபுரங்கள் ஒரு மழைக்கு கூட தாங்காத நிலையிலேயே உள்ளது.
வடக்கு மாகாணமான லுலாங்கில் வாழும் மக்கள், வீடு கட்டுவதற்காக சுவரிலிருந்து கற்களை திருடிச் செல்கின்றனர். சீன எழுத்துக்குறிகள் இருக்கும் கற்களை சுற்றுலாப் பயணிகளுக்கு அவர்கள் உள்நாட்டு மதிப்பில் 30 யுனான்களுக்கு விற்பனை செய்கின்றனர்.
இதை தொடர்ந்து, செங்கற்களை திருடுவோருக்கு அங்கு 5 ஆயிரம் யுவான் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
சமீப காலமாக இங்கு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது. அவர்களும் அக்கறையின்றி செயல்படுகின்றனர். மேலும் மழை, உப்புக் காற்று போன்ற பல இயற்கை மாற்றங்களால் பாதிப்புகள் ஏற்படுகிறது" என்று பெய்ஜிங் டைம்ஸ் பத்திரிகையின் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.