கடவுள் துகளைக் கண்டுபிடித்த ‘லார்ஜ் ஹேட்ரன் கொல்லைடர்' எனும் கருவி, மேம்படுத்தப்பட்ட திறனுடன் மீண்டும் செயல் பாட்டுக்கு புதன்கிழமை முதல் வந்துள்ளது. இதனால் இயற் பியலில் புதிய விஷயங்கள் கண்டறியப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கண்ணுக்குப் புலப்படாத துகள்களைக் கொண்டு இந்தப் பிரபஞ்சம் எவ்வாறு உருவானது என்பதைப் பற்றி ‘அணு ஆய்வுக்கான ஐரோப்பிய நிறுவனம்' (சி.இ.ஆர்.என்.) ஆய்வு செய்து வருகிறது.
கடந்த 2013ம் ஆண்டு, ‘ஹிக்ஸ் போஸான்' எனும் மனிதர்கள் கண்டுபிடிப்பதற்கு அரிதான அடிப்படைத் துகளை மேற்கண்ட நிறுவனத்தில் இருக்கும் ‘லார்ஜ் ஹேட்ரன் கொல்லைடர்' எனும் 27 கிமீ நீண்ட குழாய் வடிவிலான கருவி மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தத் துகளுக்கு ‘கடவுள் துகள்' என்றும் பெயரிடப்பட்டது.
அதன் பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு அந்தக் கருவியின் திறனை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
2012ம் ஆண்டு 8 டெராஎலக்டான்வோல்ட்ஸ் திறன் கொண்டதாக இந்தக் கருவி இருந்தது. திறன் மேம்பாட்டுப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது அது 13 டெராஎலக்டான்வோல்ட்ஸ் திறன் கொண்டதாக இருப்பதாக அந்நிறுவன விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்தக் கருவி புதன்கிழமை முதல் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்தக் கருவியில் புரோட்டான்கள் செலுத்தப் பட்டிருக்கின்றன. இவை இந்தக் கருவியின் உள்ளே ஏற்படுகிற காந்த சக்தியால் எதிரெதிர் திசையில் ஒளிக்கு நிகரான வேகத்தில் பயணித்து ஒன்றுடன் ஒன்று மோதும். ஆப்போது புதிய துகள்கள் தோன்றும். அதில் ஆய்வு மேற்கொள்ளும்போது, மேலும் புதிய தகவல்கள் கிடைக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.