உலகம்

பாகிஸ்தான் தீவிரவாதி லக்வி விவகாரம்: மவுனம் கலைத்தது சீனா

செய்திப்பிரிவு

பாகிஸ்தான் தீவிரவாதி ஜகியூர் ரஹ்மான் லக்வி விவகாரத்தில் இந்தியா, சீனா மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்துவது அவசியம் என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் மூளையாகச் செயல்பட்ட லக்வி, பாகிஸ்தான் போலீஸாரால் கைது செய்யப்பட்டு ராவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் போதிய ஆதாரங்களை சமர்ப்பிக்காததால் கடந்த ஏப்ரலில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஐ.நா. சபையில் இந்தியா முறையிட்டுள்ளது. ஆனால் இந்தியாவின் முயற்சிக்கு சீன அரசு முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இதுதொடர்பாக ஐ.நா. சபையில் வாதிட்ட சீன தூதர், பாகிஸ்தானுக்கு சாதகமாகப் பேசினார். லக்விக்கு எதிராக இந்திய தரப்பில் பாகிஸ்தானிடம் போதிய ஆதாரங்கள் அளிக்கப்படவில்லை என்று அவர் கருத்து தெரிவித்தார்.

எனினும் லக்வி விவகாரத்தில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக உள்ளன.

இந்நிலையில் அண்மையில் நேபாளம் சென்ற இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீயை சந்தித்துப் பேசினார். அப்போது லக்வி விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாடு குறித்து கடும் அதிருப்தி தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து சீன வெளியுறவுத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தீவிரவாதத்துக்கு எதிராக ஐ.நா. எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு சீனா முழு ஆதரவு அளிக்கிறது. லக்வி விவகாரத்தில் இந்தியா, சீனா மட்டுமன்றி சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்துவது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘சம்பந்தப்பட்ட தரப்பினர்’ என்று சீனா குறிப்பிடுவது பாகிஸ்தானா அல்லது வேறு அமைப்புகளா என்பது குறித்து தெளிவான விளக்கம் அளிக்கப்படவில்லை.

SCROLL FOR NEXT