சர்க்கரை ஏற்றுமதி மூலம் கிடைத்த பெரும் நிதியை தனது நாட்டின் கல்வி, ராணுவம் மற்றும் உடல் ஆரோக்கியத் துறைகளுக்குச் செலவழித்தது கியூபா. இதன் காரணமாக உலகின் தலைசிறந்த சில பள்ளிகளும், மருத்துவமனைகளும் கியூபாவில் உருவாயின. தென்னாப்ரிக்க ராணுவம் அங்குள்ள கருப்பு மக்களை எதிராகத் தாக்குதல் நடத்தியபோது, கியூபாவின் ராணுவம் கருப்பு மக்களை ஆதரித்தது.
ஆனால் கியூபாவில் பல உரிமைகள் பறிக்கப்பட்டன. அரசைப் பற்றியோ, பிடல் காஸ்ட்ரோ குறித்தோ பொது இடங்களில் விமர்சனம் செய்தால் கைதும், தண்டனையும் நிச்சயம் உண்டு என்ற நிலை இருந்தது. தங்கள் பேச்சுரிமை பறிக்கப்படுவதை விரும்பாத பலரும் அமெரிக்காவுக்குச் சென்றார்கள்.
பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் பிரதமராக 1959 முதல் 1976 வரையிலும், அதிபராக 1976 முதல் 2008 வரையிலும் பதவி வகித்தவர். 1991-ல் நடைபெற்ற ஒரு நிகழ்வு அவரது தலைமைச் சிறப்பை கேள்விக் குறியாக்கியது.
1991ல் சோவியத் யூனியன் உடைந்தது. கியூபாவின் பெரும்பாலான ஏற்றுமதிகள் சோவியத் யூனியனுக்குதான். இந்த நிலையில் ஏற்றுமதியால் கிடைத்துவந்த நிதி கிட்டத்தட்ட நின்றுவிட்டது. சோவியத் யூனியன் கியூபாவுக்கு அளித்து வந்த பல சலுகைகளை நீக்கிக் கொண்டதோடு ராணுவத்தையும் கியூபாவிலிருந்து திரும்ப அழைத்துக் கொண்டுவிட்டது.
போதாக்குறைக்கு அமெரிக்கா சமயம் பார்த்து தனது பொருளாதாரத் தடைகளை கியூபாவின் மீது விதித்தது. காஸ்ட்ரோ பதவி இறங்கினால்தான் தடைகளை நீக்கிக் கொள்வோம் என்று வெளிப்படையாகவே அறிவித்தது அமெரிக்கா. 1990-களில் கியூபா மிக ஏழ்மையான நாடாகியது.
அதன்பின் கியூபாவின் பொருளாதாரம் மெள்ள மெள்ள மேலும் வீழ்ச்சி கண்டது. ஆயிரக்கணக்கானவர்கள் கடல்வழியாக அமெரிக்காவுக்குப் பிழைப்பைத் தேடி ஓடத் தொடங்கினர். 1980-ல் ஒன்றேகால் லட்சம், 1994-ல் முப்பதாயிரம் என்றெல்லாம் வகை தொகையில்லாமல் அகதிகள் வந்து சேரவே அமெரிக்கா இவர்கள் வருகைக்குத் தடைபோட்டது. தங்கள் நாட்டுக்கு வந்து கொண்டிருந்த கியூபா மக்களை அப்படியே கடலிலேயே வளைத்துப் பிடித்து கியூபாவில் உள்ள தங்கள் கடற்தளத்துக்கு திருப்பியனுப்பத் தொடங்கிது அமெரிக்க ராணுவம்.
இடையே ஏலியன் என்ற ஆறு வயதுச் சிறுவன் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தான். கியூபாவிலிருந்து தப்பிக் கும் எண்ணத்தில் அங்கிருந்து ஏலியனை அழைத்துக் கொண்டு அவன் தாய் படகில் அமெரிக்காவுக்குக் கிளம்பினாள்.
அமெரிக்காவை நெருங்கும்போது படகு மூழ்க, அந்த விபத்தில் அந்த அம்மா இறந்துவிட்டாள். கடற்கரையோரமாக மிதந்து வந்த ஏலியனை சிலர் காப்பாற்றினர். பின்பு அவனை அமெரிக்காவில் வாழும் அவனது உறவினர்கள் அழைத்துச் சென்றார்கள்.
கியூபாவில் வசித்த ஏலியனின் தந்தை கியூபாவுக்குத் தன் மகன் திருப்பி அனுப்பப்பட வேண்டுமெனக் கூறினார். ஏலியனின் அமெரிக்க உறவினர்களோ அமெரிக்காவில்தான் முன்னேற்ற வாய்ப்புகள் அதிகம் என்பதால் ஏலியன் அங்கேயே இருக்க வேண்டும் என வாதிட்டனர். விஷயம் அரசியலாக்கப்பட்டது.
அமெரிக்க அரசு தலையிடாமல் மவுனம் சாதித்தது. “அமெரிக்க அரசு எங்கள் நாட்டுச் சிறுவனைக் கடத்திச் சென்றிருப்பதாகத்தான் இதற்கு அர்த்தம். ஏலியன் கியூபாவுக்கு அனுப்பப்படாவிட்டால், அமெரிக்கா மீது போர் தொடுப்போம்’’ என்று காஸ்ட்ரோ கர்ஜிக்க, பெரும் விவாதங்களுக்குப் பின் ஏலியன் அவன் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டான்.
அரசியல் ரீதியாக காஸ்ட்ரோ தன் செல்வாக்கைத் தக்க வைத்துக் கொண்டாலும் கியூபாவின் பொருளாதார நிலைமை மிகவும் கவலைக்கிடமானது. இந்த நிலையில் சுற்றுலாப் பயணிகளை அதிகம் வரவழைப்பதன் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியுமா என முயற்சி செய்தது கியூபா. இதில் ஓரளவு வெற்றியும் கிடைத்தது.
கியூபாவில் கவர்ந்திழுக்கும் சுற்றுலாத்தலங்கள் பல உண்டு.
ஐரோப்பியர்களால் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழமையான நகரம் என்று ஹவானாவைக் கூறுகிறார்கள். இங்குள்ள தொன்மையான, அழகான மூன்று துறைமுகங்களுக்கும் சுற்றுலாப் பயணிகள் ஏராளமாக வந்து செல்கிறார்கள்.
பழைய ஹவானா என்ற பகுதி யுனெஸ்கோவின் பாதுகாக்கப்பட்ட பகுதியாகவே இருக்கிறது. அங்குள்ள பழங்காலக் கட்டிடங்கள் சரித்திரத்தைப் பறைசாற்றுகின்றன. அழகான ராணுவக் கோட்டை ஒன்றும் இங்குள்ளது. பதினெட்டாம் நூற்றாண்டு கட்டிடம் ஒன்றில் பொருத்தப்பட்டுள்ள கண்ணாடி ஜன்னல்கள் பலரையும் கவர்கின்றன.
வரதெரோ என்பது கியூபாவில் உள்ள கடற்கரை நகரம். அழகான கடற்கரை, இரண்டு குகைகள், ஐந்துக்கும் மேற்பட்ட நவீன ஹோட்டல்கள், அற்புதமான நந்தவனங்கள் நிரம்பிய பகுதி இது. கியூபாவில் உள்ள ட்ரினிடாட் பகுதியும் சுற்றுலாவுக்கு ஏற்றதுதான். இங்குள்ள பிரம்மாண்டமான மாதா கோவிலும், பிளாசா ஸ்கொயரும், அருங்காட்சியகமும் கவரக்கூடியவை.
ஹெமிங்வேயின் பிரபல நூலான `தி ஓல்ட் மேன் ஆன்ட் தி ஸீ’’ என்ற நூலில் மிகச் சிறப்பாக வர்ணிக்கப்பட்டிருக்கும் இடம் கெயோ கேஹோ என்ற கடற்கரை பகுதி. நாட்டின் முக்கிய நிலப்பகுதியை ஒரு நீண்ட பாலத்தின் மூலம் இணைக்கிறது. மற்றபடி மிக அழகான பள்ளத்தாக்குகள், கோட்டைகள் கொண்டது கியூபா.
ஆனால் சுற்றுலாப் பயணிகளின் மூலம் வந்த நிதி போதுமானதாக இல்லை.இதனிடையே கியூபாவில் மேலும் பல மாறுதல்களைக் கொண்டு வந்தார் காஸ்ட்ரோ. கியூபாவின் வணிகத்தில் இணைந்திருந்த அமெரிக்காவின் பங்கை ஒட்டுமொத்தமாகக் கழற்றி விட்டார். அமெரிக்கா கொதித்தது. கியூபாவுடனான உறவை முழுவதுமாக துண்டித்துக் கொண்டது. அமெரிக்கர்களும் கியூபாவை வெறுக்கத் தொடங்கினர்.
‘ஏழைகளின் சொர்க்க பூமியாக’ விளங்கிய கியூபா பெரும் சிக்கலில் திணறத் தொடங்கியது. அரசு அளிக்கும் ரேஷன் பொருட்களை வாங்க மூச்சு முட்டும் கூட்டத்தில் தினந்தோறும் நின்று வாங்கிக் கொண்டு, தள்ளாடியபடி திரும்பினர். பல குடும்பங்கள் தங்கள் ஷூக்கள், அலமாரிகள் போன்றவற்றை எல்லாம்கூட விற்று குச்சிக்கிழங்கு வாங்கித் தின்ற உயிரைக் கையில் பிடித்துக் கொள்ளத் தொடங்கினர்.
‘என்ன செய்ய? எல்லாவற்றையும் அவர் கண்ட்ரோல் செய்கிறார்’’ என்று சொல்லி தாடியை உருவுவதுபோல சைகையிலேயே காஸ்ட்ரோவை மனத்தாங்கலுடன் குற்றம் சாட்டத் தொடங்கினர் மக்கள். தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இயந்திரங்களை இயக்க வைக்க எரிபொருள் இல்லை. வாங்கவோ, சரியாக விநியோகிக்கவோ வழியில்லாமல் விளைந்த பயிர்கள் எல்லாம் வயல்களிலேயே வாடத் தொடங்கின.
நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு காஸ்ட்ரோ ஒரு முக்கியக் காரணம் என்ற கடும் விமர்சனத்தை முன்வைத்தாலும் அந்தச் சரிவிலிருந்து கியூபாவைக் கடைத்தேற்றவும் அவர் ஒருவரால்தான் முடியும் என்று மக்கள் நம்பினார்கள்.
(உலகம் உருளும்)