வியட்நாமில் சீனர்களுக்கு எதிரான போராட்டம் வன்முறையாக வெடித்துள்ளது. தைவானைச் சேர்ந்த இரும்பு ஆலைக்குள் புகுந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், அந்த ஆலையை அடித்து நொறுக்கினர். இதில், சீனத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த வன்முறையில் 20 சீனர்கள் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப் படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென் சீனக் கடல் பிராந்தியத்தில், வியட்நாமுடன் சீனா மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருகிறது. இதனால், வியட்நாமில் சீனர்களுக்கு எதிராகப் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இப் போராட்டங்கள் வன்முறையாக உருவெடுத்துள்ளன.
வியட்நாமில் ஏராளமான தைவான் நிறுவனங்கள் செயல்படு கின்றன. இங்கு சீனத் தொழிலாளர்கள் பணி புரிவதால், வன்முறைக் கும்பலால் இந்நிறுவனங்கள் தாக்கப்படுகின்றன. வியட்நாமுக்கான தைவான் தூதர் ஹுவாங் சி பெங்கூறுகை யில், “இரும்பு ஆலையில் நடந்த வன்முறையில் ஒரு சீனத் தொழிலாளி உயிரிழந்தார். 90க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்’’ என்றார்.
20 பேர் பலி?
வன்முறை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவர் பலி என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
20 சீனர்கள் கொல்லப்பட்டதாக, சீன ஊடகங்கள் சில தெரிவித் துள்ளன. சீன அரசு ஊடகமான ஜின்குவா 10 சீனர்களின் கதி என்னவாயிற்று எனத் தெரிய வில்லை எனக் கூறியுள்ளது.
ஹோ சி மின் நகரத்தில் புகுந்த வன்முறையாளர்கள் அங்கு வெளிநாட்டு நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இவற்றில் தைவான், தென் கொரிய நிறுவ னங்களும் அடங்கும். இதனால், வெளிநாட்டு முதலீட்டை இழக்கும் அபாயம் வியட்நாம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.