உலகம்

இந்திய மாம்பழ இறக்குமதிக்குத் தடை பிரிட்டன் நாடாளுமன்றத்தில் விவாதம்

செய்திப்பிரிவு

இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதி செய்வதற்கு ஐரோப்பிய யூனியன் தடை விதித்திருப்பது குறித்து விவாதிக்க பிரிட்டன் நாடாளுமன்றம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த இந்திய வம்சாவளி எம்.பி. கீத் வாஸ் கூறியதாவது: அல்போன்சா வகை மாம்பழங் களை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பிரிட்டனில் உள்ள வர்த்தகர்களுக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள் ளது. மேலும், இந்தத் தடை காரணமாக இந்தியா பிரிட்டன் இடையிலான உறவும் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, இந்தத் தடை குறித்து நாடாளு மன்றத்தில் விவாதிக்கவேண்டும் என கோரிக்கை வைத்திருந்தேன். இதை ஏற்றுக் கொண்ட பிரிட்டன் நாடாளுமன்ற சபாநாயகர் வரும் 8-ம் தேதி விவாதம் நடத்த அனுமதி அளித்துள்ளார். தடை அமலுக்கு வந்துள்ள முதல்நிலையிலேயே இதுகுறித்து விவாதிக்க அனுமதி அளித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்" என்றார்.

இந்திய மாம்பழங்களில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் தாக்கம் இருப்பதால், கடந்த மே 1-ம் தேதி முதல் 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை இறக்குமதிக்கு தற்காலிக தடை விதித்து பிரஸ்ஸல்ஸ் நகரில் உள்ள ஐரோப்பிய யூனியன் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

பிரிட்டனின் வருடாந்திர மாம்பழ சந்தை மதிப்பு ரூ.693 கோடி. இதில், இந்தியாவிலிருந்து மட்டும் ரூ.64 கோடி மதிப்பிலான மாம்பழங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

SCROLL FOR NEXT