பாகிஸ்தானில் சிறுபான்மையினரான அகமதியர்களுக்கு எதிரான வன்முறை அதிகமாகியுள்ளது. அகமதியர் சமூகத்தைச் சேர்ந்த இருதய அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவரை மர்ம நபர்கள் இன்று சுட்டுக்கொலை செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
50 வயதான மேதி அலி என்ற இந்த மருத்துவர், பஞ்சாப் மாகாணத்தில் உள்ள செனாப் நகரில் உள்ள இடுகாட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் மருத்துவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு அந்த இடத்தை விட்டுத் தப்பிச் சென்றனர்.
அமெரிக்காவில் இருக்கும் இந்த மருத்துவர் சேவை நோக்கத்துடன் பாகிஸ்தான் வந்ததாகக் கூறப்படுகிறது.
அகமதியர்கள் முஸ்லிம்கள் அல்ல என்று 1974ஆம் ஆண்டு பாகிஸ்தான் அரசு அறிவித்தது. அதன் பிறகே அங்கு இந்த சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக பயங்கர வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதாகவும் பாகிஸ்தான் அரசும் எந்த வித நடவடிக்கைகளையும் எடுக்காமல் பேசாமல் இருந்து வருவதாகவும் அகமதியர் சமூக செய்தித் தொடர்பாளர் சலீம் உத்தீன் தெரிவித்துள்ளார்.