நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்தைச் சீரமைப்பதற்காக, சர்வதேச சமூகங்களிடம் ஐ.நா. சார்பில் 41.50 கோடி டாலர் (சுமார் ரூ.2654.75 கோடி) நிதியுதவியை ஐ.நா. கோரியிருந்தது. ஆனால், அதில் வெறும் 5 சதவீதம் மட்டுமே வந்துள்ளதாகவும், அங்கு மழைக்காலம் தொடங்குவதற்கு முன் உரிய உதவிகளைச் செய்ய நிதியுதவிகளை விரைவில் திரட்ட வேண்டும் எனவும் ஐ.நா. தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக நேபாளத்துக் கான ஐ.நா. மனிதாபிமான உதவிகள் ஒருங்கிணைப்பாளர் ஜேமி கோல்டிரிக் கூறியதாவது:
நிதியுதவி அளிப்பதை துரிதப்படுத்த வேண்டும். வீடிழந்தவர்களுக்கு தங்குமிடம் ஏற்படுத்துவதுதான் தற்போதைய முதன்மைத் தேவை. தோராயமாக 2,85,000 வீடுகள் இடிந்து விட்டன. மேலும் 2,30,000 வீடுகள் சேதமடைந்து விட்டன. வடிகால், சுகாதாரம், வீட்டு உபயோகப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், உணவு ஆகிய தேவைகளும் உள்ளன.
ஆனால், இந்தத் தேவைகள் அனைத்தும் வரும் ஜூன்- ஜூலை மாதத்தில் பருவமழை தொடங்குவதற்கு முன்பாக நிறைவேற்றப்பட வேண்டும். இந்த மூன்று மாத கால இடைவெளி மிகவும் சிக்கலானது, அங்கு விதைப்புப் பருவமும் கூட.
எளிதில் அணுகமுடியாத பகுதிகளில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடைவதுதான் நமது பிரதான நோக்கம். மழை தொடங்குவதற்கு முன் அவர்களுக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்தாக வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.