உலகம்

இறப்புக்கு பின்னர் என்னை மறுமணம் செய்துகொள் - மனைவிக்கு பின் லேடன் தயாரித்த வீடியோவை வெளியிட்டது யு.எஸ்.

ஏபி

அமெரிக்கப் படைகளால் சுட்டுக்கொல்லப்பட்ட அல் காய்தா தீவிரவாதி ஒசாமா பின் லேடன், தன் மனைவிக்குக் கூறிய கடைசி ஆசை குறித்த வீடியோவை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

அல் காய்தா பயங்கரவாதி கொல்லப்பட்டபோது, அவர் இருப்பிடத்திலிரிந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் சிலவற்றை அமெரிக்கா அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.

அமெரிக்காவில் நடத்தப்பட்ட இரட்டை கோபுரத் தாக்குதலில் அந்நாட்டு அரசால் தேடப்படும் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அல் காய்தா பயங்கரவாதி ஒசாமா பின் லேடன்.

சர்வதேச நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக திகழ்ந்த அல் காய்தா இயக்கத்தின் தலைவரான ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்தபோது, அமெரிக்க சிறப்பு கமாண்டோ படை புகுந்து தாக்குதல் நடத்தி அவரைக் கொன்றது.

பின் லேடனுடன் இருந்த பயங்கரவாதிகள், அவரது மனைவிகள் கைது செய்யப்பட்டனர். பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இந்த நிலையில் பின்லேடன் தேடுதல் வேட்டையில் கைபற்றபட்ட 100க்கும் மேற்பட்ட ஆவணங்களை அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குனர் அலுவலகம் தற்போது வெளியிட்டு உள்ளதாக அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஜெப் ஆன்சிகெய்டி தெரிவித்துள்ளார்.

அதன் ஒரு பகுதியாக இரானில் தங்கியிருந்த மனைவி காய்ரியாவுக்காக பின் லேடன் தோன்றிப் பேசிய வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், "நீ இரானில் இருந்து புறப்பட்டு வருவதுக்காக நான் எத்தனை காலம்தான் காத்துக் கொண்டிருப்பது" என்று அவர் கூறுகிறார்.

"எனக்கு மிகவும் பிரியமானவள் நீ' என்ற உவமையை உணர்த்தும் விதத்தில் 'நீ என் கண்ணுக்கு ஆப்பிளாக இருக்கிறாய்' என்று உருகி எழுதி இருக்கிறார் பின் லேடன். மேலும், " இந்த உலகின் நான் பெற்றுள்ள விலைமதிப்பற்ற சொத்தே நீ தான். என் மரணத்துக்கு பிறகு நீ என்னை மறுமணம் செய்து கொள்ள வேண்டும். இறப்புக்கு பின்னர் சொர்க்கத்திலும் நீ என்னையே கணவனாக தேர்வு செய்ய வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

இதைத் தவிர பல தனிப்பட்ட கடிதங்கள், வீடியோ காட்சிகள், ஆவணங்கள் என நூற்றுக்கணக்கான ஆவணங்கள் அமெரிக்காவின் வசம் உள்ளது.

ஜிகாத் அமைப்புகளுக்கு பல்வேறு நாடுகளிடமிருந்து கிடைத்த உதவி, தீவிரவாதப் பயிற்சி, நிதி நிலைமைக்கு வந்த ஆதரவு, ஆயுத கொள்முதல் மற்றும் ஆயுத சேகரிப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் அடங்கிய ஆதாரங்களை அமெரிக்கா ரகசியமாக வைத்து வருகிறது. அமெரிக்க புலனாய்வு அதிகாரிகளின் ஆய்வுக்கு பின்னர் அந்த ஆவணங்கள் பொதுவில் வெளியிடக்கூடியவையா? என்று முடிவெடிக்கப்படும் என்று ஜெப் ஆன்சிகெய்டி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT