துபாயில் நடந்த சாலை விபத்தில் பலியான இந்தியத் தொழிலாளர்கள் 10 பேரின் உடல்கள் தாயகத்துக்கு அனுப்பிவைக்கப்படும் என்று துபாயில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.
துபாயில் நேற்று (ஞாயிற்றுகிழமை) நடந்த பயங்கர சாலை விபத்தில், இந்திய தொழிலாளர்கள் 10 பேர் உள்பட 15 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர்.
ஐக்கிய அரபு அமிரகத்தில் உள்ள துபாயில், பல்வேறு நாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிகின்றனர். இதில் ஏராளமான இந்திய தொழிலாளர்கள் அடங்குவர்.
இந்நிலையில், இந்தியா மற்றும் வங்கதேசத்தை சேர்ந்த 27 தொழிலாளர்கள், பணிக்காக பேருந்தில் சென்றனர். அப்போது, சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது, தொழிலாளர்கள் சென்ற பேருந்து மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில், 10 இந்தியர்கள் உள்பட 15 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
பலியான 10 இந்தியர்களும் பிஹார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என அங்கு உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த பயங்கர விபத்து தொடர்பாக பாகிஸ்தானிய டிராக்டர் ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே இந்திய தூதரக செய்தி தொடர்பாளர் கூறுகையில், "விபத்தில் பலியான இந்தியர்களின் உடல்களை முறையாக அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பும் பணியை தூதரகம் மேற்கொண்டு வருகிறது. மேலும் அவர்களின் குடும்பத்தினருக்கு நிறுவனத்தின் சார்பாக இழப்பீடு வழங்க, தக்க உதவிகள் மேற்கொள்ளப்படும்" என்றார்.
துபாயில் 2013-ம் ஆண்டு நடந்த பயங்கர விபத்தில் வெளிநாடுகளை சேர்ந்த 23 தொழிலாளர்கள் பலியாகினர். இதனை அடுத்து நேற்று நடந்துள்ள இந்த விபத்து மிகப் பெரியது என துபாய் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.