தங்கள் நாட்டில் நிகழ்த்தப்படுகின்ற பயங்கரவாதச் சம்பவங்களுக்கு, இந்திய உளவு அமைப்பான 'ரா' பின்னணியில் இருந்து இயக்குவதாக பாகிஸ்தான் மீண்டும் குற்றம்சாட்டியுள்ளது.
பாகிஸ்தானின் கராச்சி நகரில் நேற்று (புதன்கிழமை) ஷியா பிரிவு மக்களை குறிவைத்து அவர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 47 பேர் பலியாகினர். பலர் படுகாயம் அடைந்தனர்.
இந்தத் தாக்குதல் தொடர்பாக இந்தியா சார்பில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசும்போது, "பயங்கரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தான் ஒத்துழைக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர் அய்ஜாஸ் அகமது சவுத்ரி இஸ்லாமாபாதில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது, 'பாகிஸ்தானில் அரங்கேறும் பயங்கரவாத செயல்களின் பின்னணியில் இந்திய உளவு அமைப்பான 'ரா' உள்ளது.
இந்த விவகாரத்தை இந்தியாவிடம் எடுத்து செல்ல உள்ளோம். கராச்சி சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் சிலரை கைது செய்துள்ளோம். அவர்கள் 'ரா'-விடம் பயிற்சி பெற்றவர்கள் என்று நாங்கள் சந்தேகிக்கின்றோம்" என்று கூறினார்.
சமீபத்தில் பாகிஸ்தானில் பயங்கரவாதத்தை தூண்டும் விதத்தில் 'ரா' உளவு அமைப்பு செயல்படுவதாக அந்நாட்டு ராணுவ ஆலோசனை கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.