மக்களவை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளதை அடுத்து இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச, நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தொலைபேசியில் நரேந்திர மோடியை தொடர்பு கொண்ட வாழ்த்து தெரிவித்ததோடு, இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார் ராஜபக்சே.
இத்தகவலை இலங்கை அதிபர் செய்தித் தொடர்பாளர் மோகன் சமரநாயகே தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியுடனான இலங்கை நட்புறவில் அண்மைக்காலமாக விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் பாஜக வெற்றியை இலங்கை வெகுவாக வரவேற்றுள்ளதாக அந்நாட்டு அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுஒருபுறம் இருக்க பாஜக வெற்றியை அடுத்து இந்தியா - இலங்கை நட்புறவு மேலும் பலப்படும் என அந்நாடு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மோடி வெற்றி குறித்து இலங்கையின் முன்னாள் தூதரக அதிகாரி ஜெயதிலகா கூறுகையில்: ராஜபக்சே மோடியுடன் நெருங்கிய நட்பை ஏற்படுத்த வேண்டும். மோடி, ராஜபக்சே இருவரது அரசியல் அணுகுமுறையிலும் தேசிய நலம் மேலோங்கி இருக்கும். எனவே இவ்விரு தலைவர்களுக்கும் இடையேயும் சுமுக நிலை ஏற்படாமல் தடுக்க திரைமறைவு வேலைகள் நடைபெறலாம். எனவே ராஜபக்சே மிகவும் நேர்த்தியாக மோடியுடன் நட்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் இலங்கை மிகுந்த நெருக்கடிகளை சந்திக்க நேரிடும்". இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.