உலகம்

முஸ்லிம் அகதிகள் இருவர் மீது நிறவெறி அராஜகம்: ஜெர்மன் போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை

ஏஎஃப்பி

ஜெர்மனியைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவர் ஆப்கன் மற்றும் மொராக்கோ நாட்டைச் சேர்ந்த 2 முஸ்லிம் அகதிகள் மீது நிறவெறித் தாக்குதல் மேற்கொண்டதற்காக பதவி நீக்கம் செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.

ஆப்கன் அகதியை கட்டிப் போட்டு கடும் வசை பாடிய அந்த போலீஸ் அதிகாரி மோராக்கோ நாட்டு அகதியை அழுகிய பன்றி இறைச்சியை வலுக்கட்டாயமாக உண்ணச் செய்துள்ளார்.

இதோடு மட்டுமல்லாமல் தனது இந்தச் செய்கையை தற்பெருமை கொப்பளிக்க வாட்ஸ் அப் மூலமும் குறுஞ்செய்தி மூலமும் சக காவலர்களுக்கு அனுப்பியுள்ளார். இதுதான் மனித உரிமைகள் குழுவின் கடும் கண்டனத்துக்குள்ளானது.

கடந்த மார்ச் மாதம், ஆப்கன் அகதி ஒருவரை கட்டிப்போட்டு தாக்கி, வசைபாடி அவரது மூக்கிற்குள் தனது விரல்களை விட்டு கொடுமை செய்துள்ளார். இதனை புகைப்படத்துடனும் குறுஞ்செய்தியுடனும் வாட்ஸ் அப்பில் பகிர்ந்து கொண்டு தற்பெருமை பேசியுள்ளார் அந்த போலீஸ் அதிகாரி.

அந்த ஆப்கன் அகதியிடம் அடையாள ஆவணங்களைக் கேட்டுள்ளார் அந்த அதிகாரி, அவரிடம் அப்போது ஆவணங்கள் கைவசம் இல்லை, இதனையடுத்து அவரை அடித்து துன்புறுத்தி கால்களைக் கட்டிப்போட்டு, மூக்கிற்குள் விரலை விட்டு கொடுமை படுத்தியுள்ளார்.

இதனை தனது குறுஞ்செய்தியில், அவர், “மிகவும் வேடிக்கை... பன்றி போல் கீச்சொலி எழுப்பினார்” என்று குறிப்பிட்டு அனைவருக்கும் அனுப்பியுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் ‘அல்லாவின் அன்பளிப்பு இது’ என்றும் அதில் கூறியிருக்கிறார்.

2-வது சம்பவத்தில் மோராக்கா நாட்டைச் சேர்ந்த மற்றொரு 19 வயது முஸ்லிம் அகதி, போதைப்பொருள் வைத்திருந்ததாகவும், ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணித்ததாகவும் கைது செய்யப்பட்டார். இவரை எப்படி துன்புறுத்தினார் என்பதையும் தற்பெருமையுடன் வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளார் இந்த அதிகாரி. அதாவது முஸ்லிம் ஆன இவரை அழுகிய பன்றி இறைச்சியை உண்ணச் செய்துள்ளார்.

இது ஜெர்மனியில் மனித உரிமைகள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அந்த போலீஸ் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டு அவர் மீது நிறவெறிப் புகார் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.

போர் மற்றும் வறுமை காரணமாக ஜெர்மனியில் தஞ்சம் அடையும் அகதிகளின் எண்ணிக்கை 200,000 த்திற்கும் மேல் கடந்த ஆண்டு இருந்துள்ளது. இந்த ஆண்டும் இது இரட்டிப்பாகும் என்று ஜெர்மனி அரசு கருதுகிறது.

SCROLL FOR NEXT