மே-3... உலகமெங்கும் சர்வதேச பத்திரிகை சுதந்திர தினம் அனுசரிக்கப்பட்டது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக நேற்றைய தினம் நேபாள அளவில் ட்விட்டரில் அதிகமாக ட்ரெண்டாகிக் கொண்டிருந்தது >#GoHomeIndianMedia.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு முதலில் உதவிக்கரம் நீட்டியது இந்தியாதான். இருந்தும் ஏன் நேபாள மக்களுக்கு இந்தக் கோபம். இதற்கான விளக்கத்தையும் ட்விட்டரில் அவர்களே தெரிவித்துள்ளார்கள்.
"நிலநடுக்கத்தால நாங்கள் அதிர்ந்து இருக்கிறோம். ஆனால் இந்திய ஊடகங்கள் இந்த பேரிடரை ஒரு நிகழ்ச்சியை மேலாண்மை செய்வது போல் உணர்வற்று, எதிர்மறை உளவியல் அணுகுமுறையுடன் செய்திகளை வெளியிட்டு வருகிறது" இது நேபாள நாட்டைச் சேர்ந்த ஒருவர் பதிந்திருந்த ட்வீட்.
இந்த ட்வீட் தான் நேபாள மக்களின் கோபத்தின் சாராம்சம்.
இதுவரை பலி எண்ணிக்கை 7,200-ஐ தாண்டிவிட்டது. நிலநடுக்கம் ஏற்பட்டு ஒரு வாரத்துக்கு மேல் ஆகிவிட்டதால் இனியும் யாரும் உயிருடன் மீட்கப்பட வாய்ப்பில்லை என உள்துறை அமைச்சகமே தெரிவித்துவிட்டது.
60,000 ட்வீட்கள்:
ஒரே நாளில் #GoHomeIndianMedia கீழ் பதிவான் ட்வீட்களின் எண்ணிக்கை 60,000.
இடிந்த தரைமட்டான கட்டிடங்களுக்கு இடையே வாழ்க்கையை எதிர்நோக்கியிருக்கும் எங்கள் வேதனையை பதிவு செய்கிறோம் என்ற பேரில் மேலும், மேலும் வேதனைப்படுத்துகின்றன இந்திய ஊடகங்கள் என்பதே அவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு.
நேபாள நிலநடுக்கம் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள இந்திய ஊடகங்களை வெளிநாடுகளையே பெரிதும் சார்ந்திருக்கின்றன. எனவே இதன் அடிப்படையிலேயே நேபாள துயரத்தை அவர்கள் பார்ப்பார்கள். கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரு இயற்கை பேரிடரை நாங்கள் சந்தித்திருக்கிறோம். எங்களுக்கு இந்தியா செய்து வரும் உதவிகளுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம்.
ஆனால், சில இந்திய ஊடகங்கள் இந்த துயரை ஏதோ இந்திய அரசாங்கத்தின் சார்பிலான மக்கள் தொடர்பு சேவை போல் செய்து வருவது வேதனையளிக்கிறது. நெருக்கடியான நேரத்தை பயன்படுத்திக்கொண்டு சில ஊடகங்கள் ஆதாயம் தேடுகின்றன என ட்விட்டரில் நேபாளவாசிகள் கொந்தளித்துள்ளனர்.
குடும்ப நாடகங்கள்:
சி.என்.என். தொலைக்காட்சி இணையத்தின் வலைஞர்பக்கத்தில் தனது பதிவை வெளியிட்டுள்ள நேபாளத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் சுனிதா சாக்யா, "உங்கள் ஊடகங்களும், செய்தியாளர்களும் நேபாள நிலநடுக்கச் செய்தியை வழங்குவதை ஏதோ குடும்ப நாடக தொடர்களை படம்பிடிப்பதுபோல் படம் பிடிக்கின்றனர். ஒரு செய்தியாளர் காயம்பட்டு கிடக்கும் நபருக்கு உதவாமல் அதையே செய்தியாக வழங்கிக் கொண்டிருக்கிறார்" என குறிப்பிட்டுள்ளார்.
இந்திய ஊடகங்களின் செய்திச் சேனல்களை குறிப்பிட்டு, "நேபாளம் ஒரு சுதந்திர நாடு அது ஒன்று இந்தியாவின் துணை நகரம் இல்லை" என ஒருவர் ட்விட்டரில் கருத்து தெரிவித்திருக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடியே இந்தியா ஊடகங்களை தயைகூர்ந்து திருப்பி அழைத்துக் கொள்ளுங்கள் என்ற கோரிக்கை ட்வீட்களும், நேபாளத்தின் கட்டிடங்கள் தரைமட்டமாகியிருக்கலாம், ஆனால் நேபாளத்தின் இறையாண்மை கட்டுக்கோப்பாகவே இருக்கிறது என்று சில ட்வீட்களும் பதிவாகியுள்ளன.
நேபாளத்தின் மூத்த பத்திரிகையாளர் அஜய் பத்ரா கனால் கூறும்போது, "இந்திய ஊடகங்கள் நேபாள நிலநடுக்க மீட்புப் பணியில் இந்திய அரசின் பங்கை மட்டும் உயர்த்திச் சொல்லிக் கொண்டு இருப்பது நேபாள மக்கள் மத்தியில் இந்திய அரசாங்கத்தின் மீதான பார்வையை பாதித்துள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.