மலேசியா-தாய்லாந்து எல்லையின் மலேசியப் பகுதியில் கைவிடப்பட்ட 28 ஆள்கடத்தல் முகாம்களின் அருகே சுமார் 139 இடுகாடுகளை மலேசிய போலீஸ் கண்டுபிடித்துள்ளது.
மியான்மர் வன்முறையிலிருந்து தப்பித்து வந்த ரோஹிங்யா முஸ்லிம்கள் வாங் கீலியன் பகுதியில் ஆள் கடத்தல் கும்பலிடம் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இவர்களில் பலரது சடலங்கள் தற்போது இந்த இடுகாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து காவல்துறை தலைமை ஆய்வாளர், கலீத் அபு பக்கர் கூறும் போது, “இந்த இடுகாடுகளில் மொத்தம் எவ்வளவு உடல்கள் புதைக்கப்பட்டுள்ளன என்று தெரியவில்லை. ஆனால் இன்று முதல் இடுகாடுகளை தோண்டி பிணங்களை எடுக்கும் பணி தொடங்கும்.
இப்போது வாங் கிலீயன் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட சடலங்கள் ரோஹிங்யா முஸ்லிம்களுடையதா, அல்லது வங்கதேசத்தை சேர்ந்தவர்களது சடலங்களா என்பதை அறுதியிட முடியவில்லை. காரணம் அழுகிய பிணங்கள். ஆனால் 2 வாரங்களுக்கு முன்பாக புதைக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது”
அதிகாரிகள் சந்தேகத்துக்குரிய 139 இடுகாடுகளைக் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் ஒவ்வொரு இடுகாட்டிலும் எத்தனை சடலங்கள் இருக்கிறது என்ற விவரம் சரியாகத் தெரியவில்லை” என்றார்.
மலேசிய-தாய்லாந்து எல்லையருகே மலேசிய எல்லைப் பகுதியில் புலம்பெயர்ந்தவர்களை கடத்தும் கும்பல் ஒன்று முகாம் அமைத்து செயல்பட்டது தெரியவந்துள்ளது.
மே 1-ம் தேதி முதல் தாய்லாந்து அதிகாரிகள் பதங் பேசர் அருகே நிறைய இடுகாடுகளைக் கண்டுபிடித்துள்ளனர். இதில் புலம்பெயர்ந்தோர்களின் 33 சடலங்கள் கிடந்துள்ளது.
“இது மிகவும் துயரமான காட்சி” என்று காவல்துறை தலைமை ஆய்வாளர் அபு பக்கர். “ஆள்கடத்தல் தொழில் பெரிய அளவில் இங்கு நடைபெற்று வந்துள்ளது தெரியவந்துள்ளது. பணத்திற்காக இந்தக் கொடூர வேலையைச் செய்து வந்துள்ளனர், நிச்சயம் நாங்கள் விசாரணை நடத்துவோம். தவறு நடந்திருந்தால் மலேசிய அதிகாரிகள் உட்பட ஒருவரையும் மன்னிக்கப்போவதில்லை.
புலம் பெயர்ந்தவர்களில் பெரும்பாலும் முஸ்லிம்கள். மியான்மர், வங்கதேசத்தைச் சேர்ந்த ஏழைகள். இவர்கள் ஆள் கடத்தல் கும்பல் வலைப்பின்னலிடம் சிக்கிக் கொள்கின்றனர்.
மியன்மரின் பவுத்தர்களின் தாக்குதல்களிலிருந்தும் அரச அடக்குமுறையிலிருந்தும் தப்பி, மலேசியா, இந்தோனேசியா செல்ல இவர்கள் புலம் பெயர்ந்து ஆள் கடத்தல் கும்பலிடம் பணம் கொடுத்து மாட்டிக் கொள்கின்றனர்.
இவர்களிடமிருந்து கூடுதல் தொகை கேட்டு காடுகளில் முகாம்களில் ஆட்கடத்தல் கும்பல்கள் தங்க வைக்கின்றனர். இதில் பலர் இறக்கின்றனர், இவர்களை அந்தக் கும்பல் அங்கேயே புதைத்து விடுகின்றனர்.
மனித உரிமை குழுக்கள் தாய்லாந்து - மலேசியா எல்லை அருகே நடந்து வரும் ஆட்கடத்தல் கும்பலின் பயங்கரங்கள் பற்றி தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். பெரும்பாலும் வங்கதேசத்திலிருந்து ஏழைகள் மற்றும் மியான்மர் அடக்குமுறையிலிருந்து தப்பி வரும் ரோஹிங்யா முஸ்லிம்களே ஆட் கடத்தல் கும்பலிடம் சிக்குகின்றனர்.
கடந்த மே 10-ம் தேதி முதல் 3600 பேர் மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்தில் குடியேறியுள்ளனர். இதில் வங்கதேச அகதிகள் மற்றும் மியன்மர் ரோஹிங்யா முஸ்லிம்கள் பெரும்பாலும் அடங்குவர்.
எல்லைப்புறத்தின் தாய்லாந்து பகுதியிலும் சமீபத்தில் இடுகாடுகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.