உலகம்

எம்எக்ஸ்: ஆங்கில அகராதியில் மூன்றாம் பாலினத்தவருக்கான அடைமொழி சேர்ப்பு

செய்திப்பிரிவு

ஆங்கிலத்தில் ஆண்களுக்கான அடைமொழியாக மிஸ்டர், பெண்களுக்கான அடைமொழியாக மிஸ், மிஸஸ் ஆகியன புழக்கத்தில் உள்ளன.

இந்நிலையில் இந்த இருபாலினத்தையும் சாராதவர்களுக்கும் அடைமொழி ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆக்ஸ்போர்டு அகராதியில் எம்எக்ஸ் (Mx) என்ற வார்த்தை சேர்க்கப்படுகிறது. இது இனிமேல், ஆண், பெண் ஆகிய இரண்டு பாலினத்தையும் சாராதவர்களை குறிப்பிட பயன்படுத்தப்படும். ஆக்ஸ்போர்டு அகராதியின் அடுத்த பிரதியில் இது இணைக்கப்படுகிறது.

ஏற்கெனவே கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரிட்டனின் அரசு அலுவல் சார்ந்த கோப்புகளில் மூன்றாம் பாலினத்தவரை இந்த அடைமொழியுடன் குறிப்பிடுவது வழக்கத்தில் இருக்கிறது.

இது குறித்து சண்டே டைம்ஸ் நாளிதழில், "பிரிட்டனின் அரசுத்துறைகள், கவுன்சில்கள், வங்கிகள், சில பல்கலைக்கழகங்களிலும் எம்எக்ஸ் குறியீடு பயன்படுத்தப்படுகிறது" என தெரிவித்துள்ளது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஜோனாதன் டெண்ட் கூறும்போது, "அண்மைக்காலங்களில் அனைவருக்கும் ஏற்புடைய அடைமொழி குறியீடு அகராதியில் சேர்க்கப்படுவது இதுவே முதல் முறை. சமூக மாற்றங்களுக்கு ஏற்ப ஆங்கில மொழி வளர்ச்சி காண்பதையே இது உணர்த்துகிறது" என்றார்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் எம்எக்ஸ் பயன்பாடு கடந்த ஆண்டு முதல் அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT