தீவிரவாதிகளை வேட்டையாடுவதற்காக ஆளில்லாத விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதைத்தான் நாம் பெருமளவில் செய்திகளில் படித்திருப்போம். ஆனால் இப்போது அமெரிக்காவில் ஒருவர் தனது நாயை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லவும் ஆளில்லாத விமானத்தை பயன்படுத்தி புதுமையை நிகழ்த்தியுள்ளார்.
ஜெஃப் மேயர்ஸ் என்ற அந்த நபர் தனது நாயை ஆளில்லாத விமானம் நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்வதை வீடியோவில் பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அதில் நாய் நீளமான கயிறு மூலம் ஆளில்லாத விமானத்தில் கட்டப்பட்டுள்ளது. கேமரா மூலம் நாயின் நடமாட்டத்தை ஆளில்லா விமானம் கண்காணித்து அதனை பத்திரமாக அழைத்துச் செல்கிறது. ஜிபிஎஸ் மூலம் நாய் இப்போது எங்கு சென்று கொண்டிருக்கிறது என்பதையும் எளிதில் அறிந்து கொள்ள வசதியுள்ளது.
எனினும் சாலையை கடப்பது, பிற நாய்களின் தாக்குதல் போன்றவற்றில் இருந்து விமானத்தால் நாயை காப்பாற்ற முடியாது. விமான உதவியுடன் நாயை நடைபயிற்சிக்கு அனுப்ப பாதுகாப்பான வழியை தேர்வு செய்ய வேண்டும் என்று ஜெஃப் மேயர்ஸ் கூறியுள்ளார்.