உலகம்

360 டிகிரியில் ‘செல்ஃபி!- யூ டியூபில் கலக்கும் பயண வீடியோ

செய்திப்பிரிவு

உலகம் முழுக்க சுற்றிய மனிதர் ஒருவர் தான் சென்ற இடங்களில் எல்லாம் தன்னைத் தானே 360 டிகிரி சுழற்சி வீடியோவில் பதிவு செய்து, அவற்றையெல்லாம் தொகுத்து யூ டியூபில் பதிவேற்றியுள்ளார். அது யூ டியூபில் இதுவரை பதிவேற்றப்பட்டுள்ள பயண வீடியோக்களிலேயே சிறந்த வீடியோ என்று கருதப்படுகிறது.

ஆவணப்பட இயக்குநரான அலெக்ஸ் சாகோன் (26), டெக்சாஸில் பிறந்தவர். உலகம் முழுக்கப் பயணம் செய்ய ஆர்வம் கொண்ட இவர், தன் பயணத்தை அலாஸ்காவில் இருந்து தொடங்கினார். மூன்று ஆண்டுகள், 36 நாடுகள், ஐந்து மோட்டார் சைக்கிள்கள், 125,946 மைல்கள் என இவரின் பயணம் அமைந்தது.

தான் சென்ற இடங்களில் எல்லாம், ‘கோப்ரோ' எனும் புதிய ர‌க கேமராவினால், தன்னையும் தான் இருக்கும் இடத்தையும் 360 டிகிரியில் சுழற்சியாகக் காட்டும் வகையில் வீடியோ பதிவு செய்தார். அந்தப் பதிவுகளை எல்லாம் தொகுத்து 'மாடர்ன் மோட்டார்சைக்கிள் டைரீஸ்' எனும் தலைப்பில் 2 நிமிடம் 58 நொடிகள் ஓடக் கூடிய படமாக உருவாக்கியுள்ளார்.

அந்தப் படத்தை யூ டியூபில் (https://www.youtube.com/watch?v=VTlXttQL_Yk) கடந்த 6-ம் தேதி பதிவேற்றினார். பதிவேற்றிய சில நாட்களுக்குள் ஆயிரக்கணக்கில் ‘ஹிட்' பெற்றது.

இப்போதுவரை சுமார் 6 லட்சம் பேர் இந்த வீடியோவைப் பார்த்திருக்கிறார்கள். இவர் சுற்றிய 36 நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT