இந்தியாவிலிருந்து காஷ்மீரை விடுவிக்க நேரம் வந்துவிட்டது. ஆகவே, காஷ்மீர் மக்கள் இந்தியாவுக்கு எதிராக இறுதி ஜிகாத்துக்கு (புனிதப் போர்) தயாராகுங்கள் என, 2008- மும்பை தாக்குதல் வழக்கின் முக்கிய குற்றவாளியான ஹபீஸ் சயீத் அறைகூவல் விடுத்துள்ளார்.
நரேந்திர மோடியின் பதவி யேற்பு விழாவில் பங்கேற்றதன் மூலம் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் காஷ்மீர் மக்களின் முதுகில் குத்திவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இஸ்லாமாபாத்திலுள்ள புகழ் பெற்ற ஆப்பாரா சதுக்கத்தில், கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஆதரவாளர்கள் கூட்டத்தில் ஜமாத் உத் தவா இயக்கத்தின் தலைவர் ஹபீஸ் சயீத் பங்கேற்றார். இந்த வளாகம் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யின் தலைமையகத்துக்கு மிக அருகில் அமைந்துள்ளது. இக்கூட்டத்தில் ஹபீஸ் பேசியதாவது:
காஷ்மீரை இந்தியாவிலிருந்து விடுவிப்பதற்கான இறுதிப் போரை நிகழ்த்த நேரம் வந்துவிட்டது. காஷ்மீர் சகோதர சகோதரிகளே இதற்கு நீங்கள் தயாரா? இந்த பெருமைமிக்க செயலில் என்னுடன் இணைகிறீர்களா எனக் கேட்டார். அப்போது, அங்கு கூடியிருந்த 7 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள், ‘தலைமையேற்றுக் கொள்ளுங்கள் சயீத், நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்’ எனக் கோஷம் எழுப்பினர்.
அவர் மேலும் பேசுகையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழா வில் பங்கேற்றதன் மூலம் நவாஸ் ஷெரீப் துரோகமிழைத்து விட்டதாகக் குற்றம் சாட்டினார்.
“பிரதமர் நவாஸ் ஷெரீப் அவர்களே, நரேந்திர மோடியுடன் கைகுலுக்கியதன் மூலம் நீங்கள் காஷ்மீர் மக்களின் முதுகில் குத்தி விட்டீர்கள். காஷ்மீர் மக்கள் உங்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். இந்தியாவுடன் நேசம் பாராட்டாதீர்கள். அதனால் எவ்வித பயனும் இல்லை” என்று அவர் தெரிவித்தார்.
நவாஸ்- மோடி பேச்சுவார்த் தையின் போது, ஹபீஸ் சயீத், தாவூத் இப்ராஹிம் ஆகியோர் குறித்தும் விவாதிக்கப்பட்டது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.