வெள்ளிக்கிழமை பகல் நேரம். இந்திய தேர்தல் முடிவுகள் முழுவதாகக்கூட அறிவிக்கப்படவில்லை. இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சே, மகத்தான வெற்றி பெற்று இந்தியப் பிரதமராக பொறுப்பேற்க இருக்கும் நரேந்திர மோடியை தொலைபேசியில் அழைத்து வாழ்த்தினார். இலங்கைக்கு வருமாறு நட்புடன் அழைப்பும் விடுத்தார்.
மோடியின் வெற்றி இலங்கை அரசாங்கத்திற்கும் ஒரு வெற்றி போலத்தான். கடந்த சில வருடங்களாக மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசுடன் ராஜபக்சே அரசிற்கு மீனவர் பிரச்சினை, வர்த்தக ரீதியான முரண்பாடுகள் என பல நெருடல்கள். தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள், குறிப்பாக தி.மு.க.வுடன் சமீபகாலம்வரை காங்கிரஸ் வைத்திருந்த நெருங்கிய உறவும் இலங்கை அரசுக்கு பெரும் சிக்கலாகவே இருந்தது.
எதிர்பார்க்காத பா.ஜ.க.வின் இந்த இமாலய வெற்றியை அதுவும் கூட்டணி நெருக்கடிகளுக்கு உடன்பட வேண்டிய அவசியம் இல்லாத இந்த சூழலைப் பார்த்து ராஜபக்சே அரசு ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருப்பதுபோல் இருக்கிறது. வைகோ போன்ற தமிழ் ஈழ ஆதரவாளர்கள் பா.ஜ.க. கூட்டணியில் இருந்தாலும்கூட, பா.ஜ.க.வின் பிரமாண்டமான வாக்குக் குவிப்பு, தமிழ்நாட்டில் அமோக வெற்றி பெற்ற ஜெயலலிதாவிற்கு தேசிய அளவில் பேரம் பேசும் சக்தியைக் குறைத்துவிட்டதாக இலங்கை அரசு நினைக்கிறது.
இலங்கை அரசு பிரசுரிக்கும் 'தி டெய்லி நியூஸ்' நாளிதழின் இன்றைய தலையங்கமும் மோடி அரசை ஆர்வமாக வரவேற்றிருக்கிறது. இந்திய தேர்தல் முடிவுகளை அலசிவிட்டு கடைசி வரிகளில் ஒரு முக்கியச் செய்தியைப் பதிவு செய்திருக்கிறது இந்த அரசு சார்ந்த பத்திரிக்கையின் தலையங்கம். ‘‘மஹிந்த ராஜபக்சே போலவே யாரும் தடுத்து நிறுத்த முடியாத, விளையாட்டை மாற்றத் தெரிந்த (“unstoppable, game changer to boot”) ஒரு தலைவர் ஒருவேளை இந்தியாவுக்கும் தேவைப்பட்டிருக்கலாம். அது மோடியாக இருக்கக்கூடும்’’ என்று அந்த தலையங்கம் குறிப்பிட்டிருக்கிறது. இந்த ஒப்பீடு கவலைக்குரியது.
இலங்கை நிர்வாகத்தைப் பொறுத்தவரையில், போரை ஒரு முடிவுக்கு கொண்டுவந்த வெற்றி ராஜபக்சேவையே சாரும். ஆனால் போர் வெற்றியைத் தொடர்ந்தும், இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர அரசியல் தீர்வு என்பது உடனடியாக இருப்பதாகத் தெரியவில்லை. போர் முடிந்து ஐந்தாண்டுகளுக்குப் பிறகும் இலங்கை ராணுவத்தின் தலையீடு தமிழ் மக்கள் வாழும் வட மாகாணத்தில் அதிகரித்துக்கொண்டு போகிறதே தவிர, குறையவில்லை.
ராஜபக்சே அரசு அடிக்கடி மார் தட்டிக்கொள்ளும் வடக்கின் வளர்ச்சி திட்டங்களோ நெடுஞ் சாலைகளின் எல்லைகளிலேயே நின்றுவிட்டதாக மக்கள் கவலை யுடன் கூறுகின்றனர். வங்கிகள் பெருகியதில், வடக்கில் ஒவ்வொரு கிராமமும் கடனில்தான் சிக்கத் தொடங்கியுள்ளன. இதில் வளர்ச்சி எங்கே? அது யாருக்காக? அதற்கு நாம் கொடுக்கிற விலை என்ன? இப்படி இங்கு எழத்தொடங்கியுள்ள பல கேள்விகளுக்கு இன்னும் எந்த விடையுமே இல்லாமல், தினசரி பொருளாதார பிரச்சினைகளுக்கு எதிராக வேதனைப் போர் தொடுத்தபடியே இருக்கிறார்கள் பெரும்பாலான இலங்கை தமிழர்கள்.
கடந்த வருடம் ஜூன் மாதம் பா.ஜ.க. தலைவர் ரவிசங்கர் பிரசாத் தலைமையில் ஒரு குழு இலங்கைக்கு விஜயம் செய்தது. வடமாகாணத்துக்கும் சென்று, வளர்ச்சித் திட்டங்களையெல்லாம் பார்த்து ஆச்சரியப்பட்டது. வடக்கின் ‘மாபெரும் வளர்ச்சித் திட்டங்களை’ ஏகமாகப் பாராட்டிவிட்டும் போனார்கள் அந்த குழுவினர்.
ஒருவகையில், மோடியின் இந்த தேர்தல் வெற்றியும் வளர்ச்சிக்கான வாக்குறுதிக்கு கிடைத்ததுதான். அந்த அடிப்படையில் இரு அரசாங்கங்களுக்கும் கருத்து ஒற்றுமை இருந்தாலும் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் உள்ள உறவு இனி எப்படி இருக்கும் என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
இதற்கிடையே, வட மாகாணத்தை ஆளும் தமிழ் தேசிய கூட்டணியும் ராஜபக்சேவைப் போலவே மோடி அரசாங்கத்தை உற்சாகமாக வரவேற்றிருக்கிறது. ஆக, இருபக்கமும் மோடி அரசு தங்களுக்கே சாதகமாக செயல்படும் என்ற நம்பிக்கையுடன் இருக்கின்றன. இதில் யாருடைய நம்பிக்கை வெல்கிறது என்பதற்குக் காலம்தான் பதில் சொல்லும்.