அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனிப்பட்ட முறையில் ட்விட்டர் கணக்கை ஆரம்பித்து, பதிவுகளை இடத் தொடங்கியிருக்கிறார். இதற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது.
கடந்த 2007-ம் ஆண்டு ட்விட்டரில் ஒபாமாவுக்காக >@BarackObama என்ற அதிகாரபூர்வ கணக்கு தொடங்கப்பட்டது. அந்தப் பக்கத்தை அவர் நியமித்த அரசுடன் தொடர்பில் இல்லாத அதிகாரிகள் குழு நிர்வகித்து வருகிறது. எனினும், பராக் ஒபாமாவின் ஒப்புதலைப் பெற்ற பின்னரே அந்தப் பக்கத்தில் கருத்துகளும் தகவல்களும் பகிரப்படுகிறது.
இந்த நிலையில், >@POTUS என்ற தனிப்பட்ட அதிகாரபூர்வ கணக்கு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இது, President Obama என்ற பெயரைத் தாங்கியுள்ளது. இதற்கு, வெள்ளை மாளிகை வழிவகுத்துள்ளது. இந்தப் பக்கத்தில், அதிபர் ஒபாமாவே தனிப்பட்ட முறையில் ட்வீட்களைப் பதிவு செய்யத் தொடங்கியுள்ளார்.
வெள்ளை மாளிகையும் அதிபர் ஒபாமாவின் தனிப்பட்ட அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கம் தொடர்பான தகவலை பகிர்ந்துகொண்டுள்ளது. இனி, இந்தப் பக்கத்தில் ஒபாமா நேரடியாகவே ட்வீட் செய்வார் என்பது உறுதியாகிறது.
"ஹலோ ட்விட்டர்! இது பராக். நிஜம்தாம்! ஆறு ஆண்டுகளுக்குப் பின் கடைசியில் எனக்கு சொந்தக் கணக்கு (ட்விட்டர் பக்கம்) கொடுக்கப்பட்டிருக்கிறது" என்று ஒபாமா தனது முதல் ட்வீட்டில் பகிர்ந்துள்ளார்.
தற்போதைய நிலவரப்படி, அதிபர் ஒபாமாவின் தனிப்பட்ட ட்விட்டர் பக்கத்தை சுமார் 16 லட்சம் பேர் பின் தொடர்ந்துள்ளனர். ஒரே நாளில் இந்த அளவிலான எண்ணிக்கை மிகப் பெரியது. பின்தொடர்பாளர்களில் இதுவரை உலக அரசியல் தலைவர்கள் எவரும் இல்லை என்பது ஆச்சரியமளிக்கும் அம்சம்.
குறிப்பாக, தன் பின்தொடர்பாளர்களுக்கு ஒபாமா ட்விட்டரில் பதிலளிக்கவும் தொடங்கியிருக்கிறார். அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டன், "ஒரு கேள்வி. இந்த கணக்கு உங்களது அலுவலகத்தோடு இணைக்கப்பட்டுள்ளதா?" என்று கேள்வி எழுப்ப, அதற்கு "நல்ல கேள்வி. இது இல்லத்துடன் இணைக்கப்பட்டுள்ளது" என்று பதிலளித்தார்.
@POTUS என்ற அதிபர் ஒபாமாவின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு, அதிபருடன் மக்கள் நேரடித் தொடர்புகொள்ள வழிவகுப்பதாக வெள்ளை மாளிகை கூறியிருக்கிறது.
மேலும், அந்தப் பக்கத்தை அதிபர் ஒபாமா தனிப்பட்ட முறையில் மட்டுமே இயக்குவதாகவும், பாதுகாப்பு, அரசு, அரசியல் சார்ந்த தலையீடு இருக்காது என்றும் வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கில், அவர் தனது சுய குறிப்பில், "தந்தை, கணவர் மற்றும் அமெரிக்காவின் 44-வது அதிபர்" என்று குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது.