வடக்கு-மத்திய சீனாவில் மலைப் பகுதியில் சென்று கொண்டிருந்த பஸ் 30 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த 35 பேர் பலியாயினர். மேலும் ரசாயனக் கசிவு காரணமாக 8 பேர் பலியாயினர். ஷான்ஜி மாகாணத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து சுன்ஹுவா தாலுக்கா நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
46 பயணிகளுடன் வனப்பகுதி யில் உள்ள மலைப்பகுதியில் சென்றுகொண்டிருந்த பஸ், திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற மீட்புக் குழுவினர் 25 பேரை சடலமாக மீட்டனர்.
21 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 10 பேர் பலியாயினர். 11 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சீனாவின் மலைப்பகுதியில் பஸ்ஸை அதிவேகமாக ஓட்டுவது மற்றும் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றுவது என பாதுகாப்பு விதிகளை மீறி ஓட்டுநர்கள் செயல்படுவதால் அடிக்கடி விபத்து ஏற்படுவது வழக்கமாக உள்ளது.
ரசாயனக் கசிவு
ஷான்ஜி மாகாணத்தில் உள்ள ரூய்ஜிங் ரசாயன தொழிற் சாலையில் நேற்று காலையில் திடீரென கார்பன் டை சல்பைடு கசிவு ஏற்பட்டது. இதில் மூச்சுத் திணறி 8 பேர் பலியாயினர். 2 பேர் காயமடைந்தனர். மேலும் மீட்புப் பணியில் ஈடுபட்ட 3 பேருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு யான்செங் தாலுகா நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.