உலகம்

நேபாள நிலநடுக்கத்தில் 2 லட்சத்து 50 ஆயிரம் கட்டிடங்கள் சேதம்; 6,300 பேர் பலி- அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தகவல்

பிடிஐ

நேபாளத்தில் கடந்த மாதம் 25-ம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில், மொத்தம் 2 லட்சத்து 50,000 கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பலி எண்ணிக்கையும் 6,300-ஐ தாண்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நேபாள நாட்டின் உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், "கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நேபாளத்தை தாக்கிய பயங்கர நிலநடுக்கத்தால் நாடு முழுவதும் மொத்தம் 2 லட்சத்து 50,000 கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.

1.4 குடியிருப்புகள், அலுவலகங்கள், கோயில்கள் என கட்டிடங்கள் வரையில் முற்றிலுமாக தரைமட்டமாகின. இவற்றில் 1,38,182 வீடுகள் முற்றிலும் தரைமட்டமாகின. 1,22,694 வீடுகள் ஓரளவு சேதமடைந்துள்ளன.

கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,300 ஆக அதிகரித்திருக்கிறது.

10394 அரசுக் கட்டடங்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிட்டன. 13,000 அரசு அலுவலகங்கள் பாதி சிதிலமடைந்து காணப்படுகின்றன.

நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25,000 நிதியுதவி வழங்கப்படும்" இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 25-ம் தேதி 7.9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இன்னமும் அங்கு நில அதிர்வுகள் ஏற்பட்டு வருகின்றன. இன்று காலையும், 4.2 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT