இங்கிலாந்தில் வசிப்பவர் எட்வர்ட் ஹார்ன்சே (24). இவர் தனக்கு ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட ஐபோன்கள் வேண்டும் என்று இணையதளத்தில் விளம்பரம் கொடுப்பார்.
அதைப் பார்க்கும் பலர் இவரிடம் ஐபோன்களை விற்பார் கள். அவற்றைக் குறைந்த விலைக்கு வாங்கும் எட்வர்ட், பின்னர் அவை திருடுபோன வையா அல்லது தொலைந்து போனவையா என்று 'தேசிய கைப்பேசி உடைமைப் பதிவு' மூலம் தெரிந்துகொள்வார். அவர் வாங்கிய ஐபோன்கள் திருடு போனவையாகவோ அல்லது தொலைந்துபோனவையாகவோ இல்லாதபட்சத்தில் அவற்றை பழுதடைந்துவிட்டதாகக் கூறி ஆப்பிள் நிறுவனத்துக்கு அனுப் புவார். அதற்கு பதில் புதிய ஐபோன்களை சம்பந்தப்பட்ட நபருக்கு நிறுவனம் வழங்கும்.
எட்வர்ட் இதுவரை 51 ஐபோன்களை மாற்றியுள்ளார். அந்த நிறுவனம் வழங்கிய புதிய ஐபோன்களை இணையதளத்தில் விளம்பரம் செய்து நல்ல தொகைக்கு விற்றுவிடுவார். இந்தத் தொழிலை கடந்த ஓர் ஆண்டாகச் செய்து வந்தார் எட்வர்ட். அதன் மூலம் அவருக்கு ரூ.27 லட்சம் லாபம் கிடைத்துள்ளது.
இந்நிலையில், தன்னுடைய கைவரிசையைப் பயன்படுத்தி வாங்கிய புதிய ஐபோனை அவர் வேறொருவருக்கு விற்றிருந்தார். அந்த ஐபோன், வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டது. போலீஸார் விசாரித்தபோது அதை எட்வர்ட் விற்றுள்ளார் என்பது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
தற்போது அவருக்கு ஆறு மாத சிறைத் தண்டனை விதிக்கப் பட்டுள்ளது.