இரண்டாம் உலகப்போரின்போது ஜெர்மனியின் நாஜி படைத் தளபதி கார்ல் டோநிட்ஸ் அனுப்பிய சரண்டர் தந்தி கடிதம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் விரைவில் ஏலம் விடப்படுகிறது.
ஜெர்மனி அதிபர் ஹிட்லர் 1945 ஏப்ரல் 30-ம் தேதி தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அதன்பின் ஜெர்மனி யின் வடமேற்கு பகுதியில் கூட்டுப் படைகள் வேகமாக முன்னேறின.
அப்பகுதி நாஜி படைகளின் தளபதி பீல்டு மார்ஷல் ராபர்ட் வான் கிரேம் என்பவரின் கட்டுப்பாட்டில் இருந்தது. அவரது தலைமையின் கீழ் கார்ல் டோநிட்ஸ் என்ற கடற் படை தளபதி செயல்பட்டு வந்தார்.
கூட்டுப் படைகள் ஜெர்மனிக்குள் வேகமாக முன்னேறியதால் கார்ல் டோநிட்ஸ் கூட்டுப் படைகளிடம் சரண் அடைந்தார். இந்தத் தகவலை தனது உயரதிகாரி பீல்டு மார்ஷல் ராபர்ட்டுக்கு தந்தி மூலம் தெரியப்படுத்தினார். 1945 மே 9-ம் தேதி அதிகாலை 1 மணிக்கு அந்த தந்தி அனுப்பப்பட்டுள்ளது.
பீல்டு மார்ஷல் ராபர்ட் தப்பியோடியபோது அமெரிக்க படைகளிடம் பிடிபட்டார். அவரது சட்டைப் பையில் இருந்து தந்தி கடிதம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த தந்தி கடிதம்தான் தற்போது ஏலத்துக்கு வருகிறது.
நாஜி படைகள் வீழ்ந்தபோது எழுத்துபூர்வமான எந்த ஆவணத் தையும் விட்டுவைக்கவில்லை. அனைத்தையும் எரித்து சாம்பலாக்கி விட்டனர். இந்த தந்தி கடிதம் அபூர்வ மாக தப்பியுள்ளது. எனவே இதனை ஏலம் எடுக்க ஜெர்மனி, பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்கர்களிடையே கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல இரண்டாம் உலகப் போரின்போது பயன்படுத்தப்பட்ட பல்வேறு நாடுகளின் தேசிய கொடிகள், வீரர்கள் அணிந்த சீருடைகள், அவர்கள் பயன்படுத் திய சிகரெட் உட்பட 300-க்கும் மேற்பட்ட பொருட்கள் ஏலம் விடப் பட உள்ளன.