உலகம்

கிடுகிடுத்த கியூபா - 6

ஜி.எஸ்.எஸ்

எதிர்க்கட்சிகள் பொது வேலை நிறுத்தம் ஒன்றில் ஈடுபட, படிஸ்டா ஆக்ரோஷம் கொண்டார். நாட்டின் எந்தப்பகுதி மக்களெல்லாம் புரட்சியாளர்களுக்கு உதவுகிறார்கள் என்று எண்ணினாரோ அந்தப் பகுதிகளில் எல்லாம் ‘ஆபரேஷன் வெரானோ’ என்று பெயரிட்ட தாக்குதலின் மூலம் பிடல் காஸ்ட்ரோவின் புரட்சி இயக்கத்தை முழுவதுமாக அழிப்பதுதான் அவரது திட்டம்.

ஆனால் கடும் எதிர்ப்பு காரணமாக படிஸ்டாவால் நினைத்ததை நடத்திக் காட்ட முடியவில்லை. ராணுவத்தினர் இதனால் மனச்சோர்வு அடைய, காஸ்ட்ரோ புது உற்சாகம் பெற்றார். படிஸ்டாவின் ராணுவம் தோல்வியடைய முக்கிய காரணம் அவர்களுக்கு கெரில்லா போர்முறையில் போதிய அனுபவம் இல்லாததுதான்.

பிடல் காஸ்ட்ரோவின் அணியைச் சேர்ந்தவர்களுக்கு உள்ளூர் மக்களின் ஆதரவு பெருகியது. இது போதாதென்று கியூபா நாட்டு ராணுவத்தைச் சேர்ந்தவர்களிலேயே கணிசமானவர்கள் பிடல் காஸ்ட்ரோவின் இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

மக்களின் ஆதரவை இழந்த படிஸ் டாவை இனி ஆதரிக்க வேண்டாம் என்ற முடிவுக்கு அமெரிக்கா வந்து விட்டது. என்றாலும் பிடல் காஸ்ட்ரோவை அது ஆதரிக்கத் தயாராக இல்லை. தனது பிரதிநிதி கான்டில்லோ என்பவரைத் தேர்ந்தெடுத்தது. இவர் கியூபாவின் ராணுவத் தளபதியாக ஒரு காலத்தில் இருந்தவர். ஆனால் ராணுவத் தலை வராக இருந்த படிஸ்டா, ஆட்சியைக் கைப்பற்றியபோது இவர் அதற்குத் துணை நிற்கவில்லை.

கான்டில்லோ, பிடல் காஸ்ட்ரோவோடு ஒரு ரகசிய சமாதான உடன்படிக்கைக்கு வந்தார். (அப்போதே அவர் தந்திரமாகச் செயல்பட்டார் என்பதுதான் உண்மை). ‘ஆட்சிக்கு எதிரான செயல்களை பிடல் காஸ்ட்ரோ அணி மேற்கொள்ளக் கூடாது. அமைதியான முறையில் அவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்கலாம். படிஸ்டா நிச்சயம் கைது செய்யப்பட்டு ராணுவ நீதிமன்றத்தின் முன்னால் போர்க் குற்றவாளியாக நிறுத்தப்படுவார்’. இது கான்டில்லோ அளித்த வாக்குறுதி. ஆனால் நடந்ததோ வேறு.

படிஸ்டாவுக்கு ரகசியத் தகவல் பறந்தது. அவர் சத்தமில்லாமல் தலை மறைவானார் கஜானாவில் இருந்த கோடிக்கணக்கான டாலர்களோடு ஸ்பெயினுக்குச் சென்றார் என்கிறார்கள்.

கான்டில்லோவின் செயல்பாடுகள் இத்துடன் நின்றுவிடவில்லை. நாட்டின் உச்சநீதிமன்ற நீதிபதியான கார்லோஸ் என்பவரை அதிபர் ஆக்கினார். புதிய அரசு ஒன்றையும் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

பிடல் காஸ்ட்ரோ கடும் கோபம் அடைந்தார். அவரது படை ஹவானாவுக் குள் நுழைந்து கான்டில்லோவைக் கைது செய்தது. இதற்கு ராணுவத்திலேயே இருந்த பிடல் காஸ்ட்ரோ அனுதாபிகள் உதவினார்கள்.

1959 ஆண்டின் தொடக்கத்தில் படிஸ் டாவின் அரசு முழுவதுமாக நீக்கப்பட்டது.

(இதற்குப் பிறகு ஜூலை 26 இயக்கம் தன்னை அரசியல் கட்சியாக மாற்றிக் கொண்டது. ‘கியூபா சோஷியலிஸ்ட் புரட்சியில் இணைந்த கட்சி’ என்று பெயர் வைத்துக் கொண்டது. 1965ல் ‘கியூபாவின் கம்யூனிஸ்ட் கட்சி’ என்று பெயரை மாற்றிக் கொண்டது. இந்தப் பெயர்மாற்றங்களுக்கு முன்பாக நடந்தவற்றை இப்போது பார்ப்போம்).

பிடல் காஸ்ட்ரோ ஊடகங்களுக்கு பல பேட்டிகளை அளிக்கத் தொடங்கினார். தாற்காலிக அதிபராக மேனுவல் உருஷியா என்பவரை நியமித்தார். பிடல் காஸ்ட்ரோவின் பரம சீடர் என்றே இவரைக் கூறலாம்.

ஹவானாவில் உள்ள ஹின்டல் ஹோட்டலைத்தான் பிடல் காஸ்ட்ரோ தனது முதல் அதிகாரப்பூர்வ அலுவலக மாக்கிக் கொண்டார். ‘எனது வீடும் இதுவேதான்’ என்றார் குடும்ப வாழ்வு இல்லாத பிடல் காஸ்ட்ரோ.

நாட்டில் ஊழல் குறைந்தது. கல்வி அறிவு மேம்பட்டது. பிற அரசியல் கட்சிகள் மீது தாற்காலித் தடை விதிக்கப்பட்டது. “விரைவில் பல கட்சித் தேர்தல் நடை பெறும்’’ என்று பொய் வாக்குறுதியை சளைக்காமல் கூறி வந்தார் பிடல் காஸ்ட்ரோ. நாட்டை ஷோசலிசப் பாதையில் திருப்ப முயற்சித்தார்.

புரட்சியை அடக்கும் நோக்கத்தில் ஆயிரக்கணக்கானவர்களை படிஸ்டா அரசு கொன்று குவித்திருந்தது. இதற்குக் காரணமானவர்களை காஸ்ட்ரோ தண்டிக்கத் தொடங்கினார். வழக்குகள் நடைபெற்றன. அவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டு நிறை வேற்றப்பட்டன. உள்ளூரில் இதற்கு பலத்த ஆதரவு. ஆனால் அமெரிக்க ஊடகங்கள் இந்த வழிமுறையை ஏற்கவில்லை.

“நாங்கள் என்ன அப்பாவி மக்க ளையா தண்டிக்கிறோம்? அரசியல் எதிரிகளையா பழிவாங்குகிறோம்? கொலைகாரர்களைக் கொல்கிறோம், அவ்வளவுதானே’’ என்று வெளிப் படையாகவே கூறினார் பிடல் காஸ்ட்ரோ.

பின்னர் வெனிசுவேலாவுக்குச் சென்றார். ஒரு பெரும் தொகையைக் கடனாகப் பெறுவதும், பெட்ரோலை வாங்கிக் கொள்ளவும் திட்டமிட்டார். இரண்டுமே நடக்கவில்லை.

கொஞ்சம் சோர்வுடன் பிடல் காஸ்ட்ரோ கியூபாவுக்குத் திரும்பியபோது வேறொரு சிக்கல் காத்திருந்தது. கியூபாவில் உள்ள சூதாட்டக் கிடங்குகளையும் பாலியல் கூடங்களையும் மூடச் சொல்லி உத்தரவிட்டிருந்தார் பிடல் காஸ்ட்ரோ. இதனால் எக்கச்சக்க மானவர்கள் வேலை இழந்து தவிக்கத் தொடங்கினார்கள். பிரதமராக பிடல் காஸ்ட்ரோவால் நியமிக்கப் பட்டிருந்தவர் ராஜினாமா செய்து சப்தமில்லாமல் அமெரிக்கா சென்று விட்டார்.

(உலகம் உருளும்)

SCROLL FOR NEXT